பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

163



கல்லூரியில் நீங்கள் படிக்கும் காலத்தைச் சுருக்கி, அந்த அளவுக்குக் காலத்தை தொழிற்சாலைகளில் செலவிட வேண்டும். அவ்வாறு செய்தால் உங்களுடைய நேரமும் வீணாகாது; சோம்பலும் ஏற்படாது; உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் கிடைக்கும். உங்களுடைய பெற்றோரின் சுமையும் ஓரளவுக்கு நீங்கும்.

தொழிற்சாலை படிப்புக் காலம் முடிந்ததும் உங்களுடைய பட்டம் தரப்பட வேண்டும். கல்லூரியில் யாருக்கும் இடமில்லை என்பதோ அல்லது வடி கட்டும் தேர்வு முறைகளோ (Selection) கூடாது.

ஏராளமான தொழிற் கல்லூரிகளைத் திறப்பதின் மூலம் இட நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். அரசாங்கமே புதிய கல்லூரிகளை நிறுவ வேண்டும். அதற்கு அதிகப் பணச் செலவு ஏற்படுமே என்று அஞ்சத் தேவையில்லை.

கல்லூரிகள் எல்லாம் வாணிக முறைப்படி, தொழிற்சாலை களைப் போல் நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் அங்கு உழைத்துப் பொருளிட்ட வசதிகள் இருக்க வேண்டும்.

கூட்டுறவு முறையில் கல்லூரிகள் இயங்க வேண்டும். உற்பத்தியாகும் பொருட்களின் வருமானத்தைக் கொண்டே கல்லூரியை, அதன் செலவுகளைச் சரி கட்டலாம். இதனால் நாட்டில் தொழில் அறிவும், தொழில் நிலையும், பொருளாதாரமும் உயரும்.

வாணியம்பாடி
இஸ்லாம் கல்லூரி!

தமிழ்நாட்டின் பழைய வட ஆற்காடு மாநிலத்திலும் இன்றைய வேலூர் மாவட்டத்திலும் இருக்கின்ற நகரம் வாணியம் பாடி எனும் நகராட்சி நகர். இங்கே இஸ்லாமியப் பெருமக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். அதனால் இசுலாமியர்களுக்கு என்று தனி ஒரு கல்லூரி இந்த நகரத்தில் இயங்கி வருவதால், அக்கல்லூரியின் தமிழ் மன்றத்தில், 11.2.1953-ஆம் ஆண்டில் திரு. ஜி.டி. நாயுடு அவர்கள் இங்லீஷ் மொழியில் பேசினார். அந்தப் பேச்சின் தமிழாக்கப் பகுதி சுருக்கம் இது.