பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

165



காரைக்குடி
அழக்கப்பா கல்லூரி!

காரைக்குடியில் உள்ள அழகப்பா கல்லூரியில் 1955-ஆம் ஆண்டில், வள்ளல் அழகப்பருக்கு முன்னால் மாணவர் பேரவையில் திரு. ஜி.டி. நாயுடு ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதிச் சுருக்கம் இது.

"இது ஒரு கலைக் கல்லூரி. இங்கு மாணவர்களாகிய நீங்கள் வெறும் ஏட்டுக் கல்வியைப் பெறுகிறீர்கள். இந்தக் கல்வியால் யாருக்கும் எந்தவிதப் பயனுமில்லை. இந்தக் கல்வி தோல்வி அடைவதை இன்னும் 15 ஆண்டுகளில் எல்லோரும் உணர்வீர்கள்.

இந்தக் கல்விக்காக வள்ளல் அழகப்பர் இவ்வளவு பெரிய கட்டடங்களைக் கட்டிப் பணத்தை வீணாக்கி இருக்க வேண்டாம், இதற்குப் பதிலாகத் தொழிற் கல்வியே முக்கியம் என்று ஆரம்பித்திருக்கலாம்.

ஏட்டுக் கல்வியால் வேலை இல்லாத் திண்டாட்டம்தான் பெருகும். தொழிற் கல்வியால் வேலை பெருகும்; நாடும் வளரும். ஆகவே, இப்பொழுது நாட்டில் உள்ள வெறும் ஏட்டுக் கல்விக் கல்லூரிகளை எல்லாம் உடைத்துக் கற்களையும்கூட பொடி பொடியாக்கி விட வேண்டும்.

கலைக் கல்லூரி இருந்த இடமே - அடையாளமே, அடுத்தத் தலைமுறைக்குத் தெரியக் கூடாது. அடையாளம் தெரிந்தால் பிறகு மீண்டும் ஏட்டுக் கல்வி தொடரும் எண்ணமே வரும். ஆகவே, ஏட்டுக் கல்விக் கல்லூரிகளை ஒழித்துத் தொழிற் கல்வி நிலை மாணவர்களை வளர்க்க எல்லோரும் முன் வரவேண்டும். வள்ளல் அழகப்பர் எனது நண்பர் என்னை மன்னிப்பாராக.