பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

171


ஆனால், அழைப்பை ஏற்று வந்தவர்களை எல்லாம் திரு. நாயுடு தனது இல்லத்திற்கு அழைத்துக் கொண்டு போய் அறுசுவையான விருந்தளித்து அனுப்பினார்.

ஆனால், முதலியார் திரு. நாயுடுவைத் தனியாக அழைத்து, 'என்ன நாயுடு உனது பழைய சிறுவயதுக் குறும்பும், விளையாட்டும் இன்னும் உன்னை விட்டுப் போகவில்லையே' என்று கட்டித் தழுவிக் கொண்டு இருவரும் சிரித்ததைப் பார்த்து - விருந்துண்டவர்களும் கலந்து கொண்டு சிரித்து மகிழ்ந்தார்கள்.

இந்த வயதிலும் கூட, இவ்வளவு தகுதிகள் உயர்ந்த பிறகும் கூட, தீராத விளையாட்டுப் பிள்ளையாகவே திரு. நாயுடு திகழ்ந்தார் என்பதற்கு இது ஒர் எடுத்துக் காட்டல்லவா?

600 மணி நேரம் -
பார்க்கும் போட்டோக்கள்

திரு. நாயுடு அவர்கள் போகும் இடங்களுக்கெல்லாம் கேமிரா என்ற புகைப் படக் கருவிகள் இல்லாமல் போக மாட்டார். அப்படிச் சென்றதால்தான் ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் இறுதி ஊர்வலத்தையும், எட்வர்டு மன்னரது பொருட்காட்சி சம்பவங்களையும் அவரால் இலண்டன் நகரிலே படமாக எடுக்க முடிந்தது.

புகைப்படம் எடுக்கும் கலையில் திரு. ஜி.டி. நாயுடு மிகவும் வல்லவர். வெளிநாடுகளில் பல இடங்களில் அவர் சலனப் படங்களை எடுத்திருக்கிறார். அவற்றுள் முக்கியமானது கல்வி சம்பந்தமான படமாகும்.

ஏறக் குறைய அவை பற்றிய நிகழ்ச்சிகளைப் பல லட்சக் கணக்கான அடிகள் படம் பிடித்துள்ளார். அந்தத் திரைப்படச் சுருள்களை 600 மணி நேரம் ஒட்டிப் படமாகப் பார்க்கலாம் என்றால், அதற்காக அவர் உழைத்த உழைப்புகள், செலவுத் தொகைகள் என்ன சாமான்யமானவையா?

திறமை வாய்ந்த ஒரு விஞ்ஞானியாக நாயுடு அவர்கள் திகழ்ந்ததால்தான், எல்லாவிதமான உலக நிகழ்ச்சிகளையும் அவரால் படமாகப் பதிவு செய்து வைக்க முடிந்தது.