பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


கொள்கிறேன். நீங்கள் தோற்றுவிட்டால் ஒன்பது முழம் மில் வேட்டியைக் கட்டிக் கொண்டு வந்து, கண்காட்சிச் சாலையைத் திறந்து வைக்க வேண்டும். சம்மதமா?' என்றார்.

இருவரின் வாதம் நீண்ட நேரம் நடந்தது? இரத்தின சபாபதி முதலியார் இந்த விவாதத்தைக் கவனித்து வந்தார். வாதம் அனலானது! இறுதியில் தந்தை பெரியார் அவர்களே, தான் தோற்றுவிட்டதை பலர் முன்னிலையில் ஒப்புக் கொண்டார்.

திரு. நாயுடு அவர்கள் எடுத்துக் கொடுத்த மில் வேட்டியைத் தந்தை பெரியார் கட்டிக் கொண்டு நாயுடுவுடன் கண்காட்சி சாலையைத் திறந்து வைக்கச் சென்றார்.

கண் காட்சிக்குள்ளே பெரியார் காலடி வைத்ததும், 'இந்த வாதப் போட்டியில் வெற்றி எனக்குத்தான்' என்று தந்தை பெரியார் பெருமையோடும், பெருமிதத்தோடும் கூறியதைக் கேட்ட ஜி.டி. நாயுடு அவர்கள் அதிர்ச்சி அடைந்து, "அது எப்படி?” என்று கேட்டார்.

“எனக்கு இனாமாக மல் வேட்டி கிடைத்தது அல்லவா?" என்று தந்தை பெரியார் மகிழ்ச்சிப் பொங்கக் கூறினார்! அவர் சொல்லியதைச் சிரித்துக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை ஜி.டி. நாயுடு அவர்கள், "இருந்தாலும் பெரியார் பெரியார்தான்" என்றார்:

தான் தோற்றுப் போனதைப் பற்றியோ, காங்கிரஸ் கட்சியின் இலட்சியமான 'கதராடை அணிதல்' என்ற கொள்கை தோற்றுவிட்டதே என்ற கவலை ஏதும் படாமல், இனாமாக வேட்டி கிடைத்ததைப் பற்றிப் பெருமையாகப் பேசினர் பெரியார்!

அந்தப் பெரியார்தான், பின்னாளில் காங்கிரஸ் இயக்கத்தை வீழ்த்திட, காங்கிரஸ் கட்சியை விட்டே வெளியேறினார்: கதர் துணிகளை அணிவதையும், அவர் கைவிட்டு விட்டார். கருப்புச் சட்டையோடே இறுதியில் காலம் ஆனார்! இதுவும் ஒரு தீர்க்க தரிசனமான அரசியல்தானே!