பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


அந்த ஆளும், துரைசாமியும் கலங்கல் கிராமத்திலுள்ள அவரது வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும்போது, வழியில் ஒரு வைக்கோல் வண்டி நிறை மாதக் கர்ப்பிணிபோல மெதுவாக வந்து கொண்டிருந்தது.

வண்டியில் பாரம் அதிகம்! மாடுகளால் அந்த வண்டியை இழுக்க முடியாமல் நடை தளர்ந்து வந்து கொண்டிருப்பதை கண்ட துரைசாமி, பாரத்தை இழுக்க முடியாமல் தள்ளாடி வரும் மாடுகளைப் பார்த்ததும் இரக்கமடைந்து. அந்த மாடுகளைச் சற்று ஒய்வெடுக்க விடலாம் என்று நினைத்தான்.

என்ன செய்வது? இந்த இரக்க உணர்வை வண்டிக்காரனிடம் கூறினால் கேட்பானா? கேட்கவே மாட்டான் என்ற முடிவுக்கு வந்த துரைசாமி, தன்னிடமிருந்த தீப்பெட்டியை எடுத்து ஒரு தீக்குச்சியைத் தேய்த்து வைக்கோல் வண்டியின் மேலே போட்டதும், வண்டியிலே இருந்த வைக்கோல் எல்லாம் எரிந்து சாம்பலானாது. மாடுகள் பூட்டை விட்டு அலறித் தப்பித்து ஓடின. வண்டிக்காரன் இந்த செய்தியை ராமசாமியிடம் ஓடிப் போய் கூறினான்.

கோபால்சாமி மிகவும் வருந்தினார். மீண்டும் துரைசாமியைத் தனது தோட்ட வீட்டுக்கே செல்லுமாறு, கண்டித்துப் பேசி அனுப்பி விட்டார். துரைசாமி தனது தோட்ட வீட்டுக்குள்ளேயே ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகள் இருந்தார். அதற்குள் ஆங்கில அறிவும், பெற்றிட விரும்பினார்.

வயது பதினெட்டானது, வாலிபன் ஆனார் துரைசாமி. தோட்ட வாழ்க்கையில் பருத்தி விவசாயத்தையும், அதன் வியாபார நுட்பத்தையும், புகையிலைப் பயிரால் வரும் நன்மைகளையும், பன வருவாய் தரும் அவற்றின் முழு விவரத்தையும் அறிந்த துரைசாமி, தனது தந்தையாரின் வியாபாரத்துக்குத் துணையாகவும் இருந்து, தந்தையின் தொழில் நுட்பங்களை எல்லாம் நன்கு புரிந்து கொண்டார். தந்தையும் - மகனும் தொழிலில் சேர்ந்தே ஈடுபட்டார்கள்.

தந்தையுடன் தொழிலில் ஈடுபட்ட நேரம் போக, தான் பழையபடி குறும்புத்தனமாக விளையாடுவதிலும், படிப்பதிலும் அவர் நேரத்தைச் செலவழித்தார்.