பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


குறும்புகளைச் செய்து கொண்டே பழக்கப்பட்டுப் போன துரைசாமி, இப்போது ஒரு மோட்டார் சைக்கிளைக் கழற்றிப் பழுது பார்த்து, மீண்டும் அதைப் பூட்டி ஒட்டுமளவுக்கு பொறியியல் மெக்கானிக்காக மாறி விட்டார். இதுதானே அறிவின் நுட்பம்?

மெக்கானிக்காக வளர்ந்த துரைசாமி, அந்தத் துறையிலே மனம் கோடாமல் தொடர்ந்து ஈடுபட்டிருந்தால் பெரும் மெக்கானிக் நிறுவனத்தின் உரிமையாளராக ஆகி இருக்கலாம். ஏனென்றால், மெக்கானிசத்தைத்தான் அவர் தெரிந்து கொண்டாரே! பழக்கப்பட்ட தொழிலாகவும் அவருக்கு இருந்த ஒரு தொழில்லலவா அது?

பஞ்சு வாணிகம் :
பணம் நட்டம்!

அதை விட்டு விட்டு, நண்பர்கள் சிலரிடம் சில நூறு ரூபாய்களைக் கடனாகப் பெற்றுக் கொண்டு, ஏற்கனவே தனக்குப் பழக்கப் பட்டத் தொழிலான பஞ்சு வணிகத் தொழிலில் ஈடுபட்டு விட்டார்.

அந்த பஞ்சு வியாபாரத்துக்குப் பணமுதலீடு அதிகம் தேவை. அந்தத் தொகை துரைசாமியிடம் இல்லை. அதனால், சில மாதங்கள்தான் அந்த வியாபாரத்தில் அவரால் தாக்குப் பிடிக்க முடிந்தது. மேற்கொண்டே பணத் தேவையை அவரால் திரட்ட முடியவில்லை; உதவி செய்வாரோ யாருமில்லை. துன்பங்ளையும், பண சச்சரவுகளையும் சமாளிக்க முடியாத துரைசாமி, வியாபாரத்திலே பெருத்த நட்டம் வந்ததால் கையிலே இருந்த பணத்தையும் இழந்து, வாணிகத்தையும் நிறுத்தி விட்டார்.

ஒரு தொழிலில் நட்டம் வந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால், அனுபவம் தானே பணம்; முதலீடு, அதை மட்டுமே அவர் பெற்றதால், நட்டத்திற்காக வருத்தப் படாமல், தோல்வியே வெற்றிக்குரிய அறிகுறி என்பதை உணர்ந்து கொண்டார் துரைசாமி.

பஞ்சு வியாபாரம் நட்டமானதும், கோவைக்கு அருகே உள்ள சிங்காநல்லூர் என்ற இடத்தில் பருத்தியிலே இருந்து விதைகளைப் பிரித்தெடுக்கும் ஆலைகள் இருப்பதைக் கேள்விப்பட்டு அங்கே வந்தார் துரைசாமி.