பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


முதல் உலகப் போர் அப்போது துவங்கப்பட்டு நடந்து கொண்டிருந்த நேரமாதலால், பருத்தித் துணிகளுக்கு நல்ல விலையும், கிராக்கியும் இருந்தது. போர்க் காரணத்தால் பஞ்சாலைத் தொழில் வளமாக வளர்ந்து வந்தது!

1919-ஆம் ஆண்டில் உலக முதல் போர் முடிந்து விட்டது. இதனால், துரைசாமி ஆரம்பித்த பஞ்சாலையும் நிறைய லாபம் கொடுத்தது. 1919-ஆம் ஆண்டில் மட்டும் அவருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் லாபம் வந்துள்ளது.

கோவை பஞ்சாலை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நடை பெற்று வந்ததாலும், லாபம் அதிகமாகக் கிடைத்ததாலும், பணச் செல்வாக்கும், அதனால் அவருக்குரிய சொல் வாக்கும் நாளும் வளர்பிறைபோல வளர்ந்து வந்தக் காரணத்தால், துரை சாமி கோவை மாவட்டத்துப் பணக்காரர்களிலே ஒருவராகத் திகழ்ந்தார்.

கோவை நகரின் :
தொழிலதிபர் ஆனார்:

இந்திய தேசியக் காங்கிரஸ் பேரியக்கக் கூட்டங்களோ, மாநாடுகளோ, ஆண்டு தோறும் எங்கு நடைபெற்றாலும், வருகின்ற சிறப்பு அழைப்பை அவமதிக்காமல் அங்கே பார்வையாளராகச் சென்று அவர் கலந்து கொள்வார்!

எடுத்த எடுப்பிலேயே ஒரு வியாபாரத்தில் துரைசாமிக்கு ஒன்னரை லட்சம் ரூபாய் லாபமாக வந்த பின்பு, அந்த ரூபாயை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று அலைமோதிய சிந்தனையாளரானார் அவர். எனவே, ஏதாவது வியாபாரம் செய்யலாமே என்ற நோக்கில் பம்பாய் மாநகர் சென்றார் துரைசாமி!

அன்றைய பம்பாய் எனப்படும் இன்றைய மும்பை மாநகர்க்குச் சென்ற துரைசாமி, பஞ்சு வியாபாரம் நடத்திப் பொருள் திரட்ட ஒடியாடி அலைந்தார். இவ்வாறாக, தேவையான செலவுகளுக்கும், உணவு, உடை, உறையுள் ஆகியவற்றுக்கும், அவர் கையிலே இருந்த ஒன்னரை லட்சம் ரூபாயும் செலவாகிவிட்டது!