பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

43



மோட்டார் தொழிலில் தேவையற்றப் போட்டி நிகழாமல் தடுத்தார்; அதே நேரத்தில் சிறு முதலாளிகள் அழிந்து போகாதவாறு, தெளிவான முறையில், எல்லா முதலாளிகளுக்கும் மன நிறைவு உண்டாகுமாறு ஒரு கூட்டுறவு மோட்டார் தொழில் அமைப்பை உருவாக்கி, நாட்டுக்கு நல்ல ஒரு வழியைக் கூட்டுறவு முறையில் முதன் முதலாக ஏற்படுத்தி, ஜி.டி. நாயுடு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

கூட்டுறவு முறையில் :
மோட்டார் தொழில்!

“யு.எம்.எஸ். போக்குவரத்து நிறுவனம், ஆற்றி வரும் நன்மைகள், வசதிகள் மக்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளன. அதற்குக் காரணம், அந்த நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் தலைவர், ஆர்வமிக்க ஓர் அறிஞர் மட்டுமன்று, நிருவாகத் திறமை மிக்கவராகவும் இருக்கின்றார்.

அதன் அடையாளமாக அவர், மக்கள் உட்காருவதற்குரிய இருக்கைகளும் பணியாட்கள் பயணிகளிடம் நடந்து கொள்ளும் அன்பு முறைகளும், தங்குவதற்கான இட ஏற்பாடுகளும், அதற்குரிய சகல வசதிகளும், செய்யப்பட்டிருப்பதை என்போன்றார் நேரில் பார்த்து வியப்படைந்தது தான் என்றால் மிகையாகா” என்று, ‘சாலை - புகை வண்டி போக்குவரத்து’ என்ற நூலில் அதன் ஆசிரியர் திரு. பத்திரி ராவ் பாராட்டியிருப்பதே அதற்குப் போதிய சான்றாகும்.

அந்த வகையில் யு.எம்.எஸ். நிறுவனத்தின் சேவைகளை, சமுதாயப் பொருளாதார நலன்களுக்குப் பயன்தரக் கூடிய முறையில் அவ்வப்போது கண்காணித்துக் குறைகளைப் போக்கி, ஜி.டி. நாயுடு, நிறைவுகளைச் செய்துள்ளார் என்று அந்த ஆசிரியர் மேலும் அதைப் புகழ்ந்து குறிப்பிட்டுள்ளார்.

பேருந்துக்கு வரும் பயணிகளிடமும், அவர்கள் தங்குமிடங்களில் அமர்ந்திருக்கும் போதும், வண்டிகளில் பயணம் செல்கின்ற போதும்; அவர்களிடம் மிகுந்த மரியாதையுடனும், அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று தனது ஊழியர்களுக்கு திரு. நாயுடு கட்டளையிட்டிருப்பது போற்றுதலுக்குரிய நிருவாக முறைகளாக இருந்தன.