பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6. இரண்டாம் உலகப் பயணத்தில்
எட்டாம் எட்வர்டு, நேரு சந்திப்பு!

திரு. ஜி.டி. நாயுடுவின் முதல் உலகச் சுற்றுப் பயணம் அவர் எதிர்பார்த்தபடி வெற்றி பெற்றதால், மறுபடியும் உலகத்தைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் மேலோங்கியது.

முதல் முறை அவர் உலகத்தை வலம் வந்தபோது, அந்தந்த நாடுகள் எப்படியெல்லாம் முன்னேற்றம் கண்டு, வளர்ச்சி பெற்றிருக்கின்றன என்பதை மட்டுமே பார்த்தார். அந்த உலகப் பயணத்தில் அவருக்குள் உருவான அறிவியல் அறிவு, தொழிலியல் உணர்வுகள், பல நாடுகளில் வாழும் மக்களின் பண்பாடுகள், நாகரிகங்கள், அந்தந்த நாட்டு மக்கள் அன்றாடம் அனுபவிக்கும் வாழ்க்கை வசதிகள் ஆகியவற்றை திரு. நாயுடுவுக்கு உணரும் வாய்ப்புக் கிடைத்தது.

இரண்டாவது :
உலகப் பயணம்!

மறுபடியும் உலகச் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டால், முதல் முறையில் தாம் கண்டுணர்ந்த அறிவு வளர்ச்சிகளை, மேலும் சற்று ஆழமாக, கவனமாக, ஆய்வுக் கண்ணோட்டத்தோடு காண முடியுமே என்ற ஆர்வம் அவருக்கு அதிகமானதால், இரண்டாம் முறையாக அவர் உலகத்தைச் சுற்றி வரத் திட்டமிட்டார்.

ஒரு மனிதன் அறிவியல், தொழிலியல், வாழ்வியல், பொருளியல் கண்ணோட்டத்தோடு உலகைச் சுற்றி வர நினைத்தால், அதற்கான அந்தந்த நாடுகளைப் பற்றிய முழு உண்மைகளைக் கற்றறிந்திருக்க வேண்டும் அல்லது கேட்டுணர்ந்திருக்க வேண்டும்.