பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


இத்தனைக்கும் அண்ணா ஒர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து ஆளும் கட்சியாகி, முதல்வரானவர். அவருக்குத் தமிழ்நாடே திணறித் தவித்துத் தேம்பி நின்ற மக்கள் கூட்டம் - ஊழிப் பெருக்காக மாறிக் கடலாகக் காட்சி அளித்தது என்றால், இங்கிலாந்து நாட்டில் The never sun set in British Empire என்று கூறுமளவுக்கு, மாமன்னராக இருந்த, சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராச்சிய சக்கரவர்த்தியின் மரண ஊர்வலத்துக்கு - எவ்வளவு பெரிய மக்கட் திரள் கூடியிருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒரு வரலாற்றுச் சம்பவம் அல்லவா?

ஐந்தாம் ஜார்ஜ் சக்ரவர்த்தியின் அந்த மரண இறுதி ஊர்வலத்தில், இலட்சக் கணக்காகத் திரண்டிருந்த மக்கள் நெருக்கடியைக் கண்டு மருளாத ஜி.டி. நாயுடு அவர்கள், கூட்ட நெருக்கடிகளைச் சமாளித்துக் கொண்டு, அந்த ஊர்வலக் காட்சிகளைத் தொடர்ச்சியாக ஒரு திரைப்படம் போல வீதி வீதியாகச் சென்று படமெடுத்தார் என்றால் - இந்த பணி என்ன சாமான்யமான பணியா?

ஒலிம்பிக் போட்டிகளையும்
10 நாளாகப் படம் எடுத்தார்!

ஐந்தாம் ஜார்ஜ் மன்னருடைய மரண ஊர்வலங்களைத் தொடர்ப் படங்களாக்கியதோடு நில்லாமல், 1935-ஆம் ஆண்டில் இலண்டன் மாநகரிலே நடைபெற்ற பத்து நாட்களின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளையும் ஜி.டி. நாயுடு படமாக எடுத்தார்.

இத்துடன் நின்றாரா நாயுடு? இங்கிலாந்து நாட்டு மன்னராக அப்போது இருந்த எட்டாம் எட்வர்டு, ஒரு புகழ் பெற்ற பொருட்காட்சி சாலையைக் காண வந்திருந்தார். அப்போது ஜி.டி. நாயுடு பொருட்காட்சி சாலைக்குள் மன்னர் நுழையும் வாயிலில் புகைப் படக் கருவியோடு காத்துக் கொண்டிருந்தார்.

எட்வர்டு மன்னர் ஏறி வந்த கார்; அந்தப் பொருட்காட்சி சாலை வாயில் முன்பு வந்து நின்றது. காரின் கதவுகள் திறக்கப்பட்டன. மன்னர் காரைவிட்டு வெளியே காலடி எடுத்து வைத்த நேரத்தில், ஜி.டி. நாயுடு சாலையின் குறுக்கே ஒடிச் சென்று எட்டாம் எட்வர்டு மன்னரை நேருக்கு நேராக நின்றுப் படமெடுத்துக் கொண்டிருந்தார்.