பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

79



இனிமேல் முக சவரம் செய்ய கடைக்குப் போகக் கூடாது. ஒன்று முகத்தை நாமே மழித்துக் கொள்ள வேண்டும். இல்லை யானால் தாடியை வளர்த்துக் கொள்ள வேண்டும் - என்பதுதான் அந்த முடிவு.

தாடி வளர்த்துக் கொண்டால், அது நமது தொழிலுக்கு ஒத்து வராது என்றுணர்ந்த திரு. நாயுடு அவர்கள், தாமே ஷேவிங் செய்து கொள்வதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று?

திரு. நாயுடுவின் அழகான சிவந்த முகத்தில் பிளேடுகளால் பல வடுக்கள், காயங்கள், ரத்தக் கசிவுகள் ஏற்பட்டு அதை முகத்தின் அழகைக் குன்றச் செய்துவிட்டன. காரணம் என்ன தெரியுமா இந்த நிலைக்கு?

முக சவரம் செய்திட நாயுடு பயன்படுத்திய பிளேடுகள் எல்லாமே - போதிய அளவுக்குக் கூர்மை இல்லை. அதனால்தான் முகத்தில் ரத்தக் காயங்களும், வடுக்களும் ஏற்பட்டுவிட்டன என்பதை உணர்ந்த திரு. நாயுடு; புதிய பிளேடு கண்டுபிடித்தால் என்ன என்று எண்ணி, அதற்கான செயலில் ஈடுபட்டார். தோல்வியே ஏற்பட்டது அவரது முயற்சிக்கு!

இலண்டன் நகரை விட்டு, நாயுடு செர்மன் நாட்டிலுள்ள பெர்லின் நகருக்குச் சென்று முக சவரம் செய்து கொள்ள அங்குள்ள ஒரு கடைக்காரனை எவ்வளவு பணம் என்று நாயுடு அவர்கள் கேட்டார். அவன் செர்மன் நாணய மதிப்பில் ஒரு மார்க்கு என்றான்.

ஒரு மார்க்கு கூலி அதிகமானது என்று எண்ணிய ஜி.டி.நாயுடு, கடையை விட்டு வெளியேறி, செர்மன் பிளேடுகளிலே சிலவற்றை வாங்கிப் பார்த்து, அவற்றில் மக்களால் மதிக்கப்படும் பிளேடு எதுவோ, அதனால் அவர் சவரம் செய்து பார்த்தார்.

பழையபடி அவர் முகம் ரத்தக் காயங்களாயின; அதனால் வடுக்களும் உண்டாயின. இவற்றை மீண்டும் முகத்தில் கண்ட நாயுடு அவர்கள், மறுபடியும் புதிய பிளேடு கண்டுபிடிக்கும் முயற்சியிலே ஈடுபட்டார் அவர்.

அதற்கான விஞ்ஞானச் சோதனைகளை நாயுடு அவர்கள், பெர்லின் சோதனைச் சாலைகளிலே சென்று ஆராய்ச்சி நடத்தினார்.