பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



ஹெயில் பிரான் என்ற ஒரு நகரம், ரசாயனப் பொருட்களுக்குப் புகழ்பெற்ற இடமாகும். அங்கே "கோபர் - ஆப் டெல்டாஸ்" என்ற பெயருடைய ஒரு விஞ்ஞானியின் சோதனைச் சாலை இருந்தது.

அந்தத் தொழிற் சாலையின் நிருவாகிகளை நாயுடு அணுகி, 'நான் ஒரு விஞ்ஞான சோதனை நடத்த விரும்புகிறேன். எனக்கு ஒரு சிறு இடம் ஒதுக்கித் தரமுடியுமா என்று கேட்டார்.

அதற்கு அந்த நிருவாகம் அவருடைய முயற்சியை ஏற்றுத் தனி இடம் ஒன்றை உருவாக்கி, அந்த அறையில் விஞ்ஞான சோதனைக்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தது.

தனது பிளேடு கண்டுபிடிப்பின் முதல் முயற்சியை, அந்த கோயர் - ஆஸ்பெல்டரிஸ் தொழிற் கூடத்திலே தான் ஜி.டி. நாயுடு துவக்கினார்.

சோதனை மேல் சோதனைகளை நடத்திக் கொண்டே இருந்தார். இரவும் - பகலும் அதே சோதனையிலேயே தொடர்ந்து ஈடுபட்டார். சில நாட்கள் இவ்வாறு அவர் இடைவிடாமல் செய்த சோதனைகளால் வெற்றியைப் பெற்றார்.

முயற்சி அவருக்கு மெய்வருந்தப் புகழ்க் கூலியைக் கொடுத்தது. உயர்ந்த ரகமான, தரமான ஒரு பிளேடைக் கண்டுபிடித்து, அதற்கு "ரேசண்ட் பிளேடு" என்று பெயரிட்டார்.

விஞ்ஞான அறிவு பெற்ற பல வித்தகர்கள் நடமாடும் தொழிற்சாலை அது என்பதால், அங்கே தினந்தோறும் வந்து போகும் அறிவியல் ஆய்வாளர்கள், ஜி.டி. நாயுடுவின் ரேசண்ட் பிளேடு கண்டுபிடிப்பை வெகுவாகப் பாராட்டினார்கள்.

பிளேடின் பெயரையும், பிளேடையும் ஜெர்மன் நாட்டிலேயே பதிவு செய்து கொள்ளுமாறு, பாராட்டிய பண்பாளர்கள் திரு. நாயுடு அவர்களிடம் வற்புறுத்திக் கூறினார்கள்.

அவர்கள் எண்ணம் சரியானதுதான் என்று நம்பிய ஜி.டி. நாயுடு அவர்கள், 600 மார்க்குகள் கட்டணம் கட்டித் தனது பிளேடை ஜெர்மன் நாட்டிலே பதிவு செய்தார்.