பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

81



ரேசண்ட் பிளேடு மின்சார சக்தியால் இயங்கக் கூடியது. பிளேடுக்குரிய மோட்டாரை செர்மன் நாட்டிலும், கைப்பிடியை சுவிட்சர்லாந்து நாட்டிலும் திரு. நாயுடு தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்க சம்பவமாகும்.

பிளேடு தயாரிப்பதற்குரிய உயர்ந்த ரக இரும்பை நார்வே நாட்டிலே இருந்து அவர் பெற்றார். பத்தாயிரம் பிளேடுகளை முதன் முதலாக உற்பத்தி செய்தார். அவற்றை உலகம் எங்குமுள்ள தனது நண்பர்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் சிலவற்றை அனுப்பி வைத்தார். நன்றாக அந்தப் பிளேடுகளை விளம்பரம் செய்யுமாறு நாயுடு அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

இரண்டாம் முறை நாயுடு உலகச் சுற்றுப் பயணம் செய்த போது தான் கண்டுபிடித்த பிளேடுகளை விளம்பரம் செய்திட, உலகப் புகழ் பெற்ற 'டைம்ஸ்' என்ற பத்திரிக்கை அலுவலகத்துக்குள் சென்றார்.

இலண்டன் நகரிலுள்ள அந்தப் பத்திரிக்கையில் வரி விளம்பரம் தொடர்ந்து ஒரு மாதத்துக்குச் செய்திட ஆயிரம் பவுன்கள் ஆகும் என்று அந்தப் பத்திரிக்கை நிர்வாகிகள் கூறினார்கள். அதைக் கேட்டதும் அவர் விளம்பரம் தேவையில்லை என்று திரும்பி வந்துவிட்டார்.

இலண்டன் நகரில் உள்ள கடைக்காரர்களை நாயுடு அணுகி, தனது பிளேடுகளை அவரவர் கடைகளின் காட்சி அறைகளில் மக்களின் பார்வைக்கு வைக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு அவர்கள் மறுத்துவிட்டார்கள்.

பிறகு, சில்லறைக் கடைக்காரர்களைப் பார்த்து, பிளேடு ஒன்றை 15 ஷில்லிங்குக்குத் தருவதாகவும், அவற்றை விற்றுக் கொடுக்கும்படியும் கேட்டார்; ஒரு சிலர் நாயுடு கூறியதைக் கேட்டுக் கொண்டு அவ்விதமே செய்தார்கள்.

சில நாட்களுக்குப் பிறகு, சிறு கடைக்காரர்கள் கடைகளில் பிளேடுகள் - நன்றாக, பரபரப்பாக விற்பனையானதால், நாயுடு பிளேடுகளுக்கு அங்கே நல்ல மரியாதை உண்டானது.