பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு



இலண்டன் சிறு கடைகளில் நாயுடு அவர்களின் ரேசண்ட் பிளேடுகளுக்கு நல்ல விற்பனைகள் பெருகி, பிளேடுகளுக்கு கிராக்கி உருவானதால், பிளேடு ஒன்றுக்கு 10 ஷில்லிங் விலையை ஏற்றினார். ஒரு பிளேடு 25 வில்லிங் விலைக்கு அவை விற்கப்பட்டன. இரண்டே மாதத்தில் இலண்டனில் மட்டும் 7500 பிளேடுகள் போட்டிப் போட்டு விற்பனையாயின.

அதே ரேசண்ட் பிளேடுகள் இந்தியா விற்பனைக்கும் வந்தன. ஒரு பிளேடு விலை 9 ரூபாய்க்கு விற்றது. இவ்வாறு நாயுடு பிளேடுகள் இலண்டன் கடைகளிலே போட்டிப் போட்டு விற்பனையானதால், ஏற்கனவே விற்றுக் கொண்டிருந்த பழைய நிறுவனங்களது பிளேடுகளுக்கு எல்லாம் செல்வாக்குக் குறைந்துவிட்டது. இதனால் வியாபாரிகளுக்கு இடையே பொறாமை ஏற்பட்டது, அவர்கள் நாயுடு பிளேடுகளின் விற்பனையைக் கண்டு அஞ்சினார்கள்.

எப்படியாவது நாயுடு பிளேடுகளின் விற்பனைச் செல்வாக்கைக் குறைக்க வியாபாரிகள் நினைத்தார்கள், முடியவில்லை. நாளுக்கு நாள் ரேசண்ட் பிளேடுகளின் விற்பனையே பெருகின.

எனவே, பழைய நிறுவனக்காரர்கள் - தங்களது பிளேடுகளின் விற்பனையைப் பெருக்கவும், இழந்த விற்பனைச் செல்வாக்கை மீண்டும் மக்களிடம் நிலை நாட்டிடவும், நாயுடு பிளேடுகள் விற்பனையைத் தகர்க்கவும் திட்டமிட்டார்கள்.

போலி பிளேடுகள்
போட்டிக்கு வந்தன!

இலண்டன் நகரத்திலே உள்ள ஒரு பெரிய இங்லிஷ்காரர் நிறுவனம், 'டெலி ரேசர் - Tele razor' என்ற பெயரில் ஒரு புதிய பிளேடைத் தயாரித்துக் கடை வீதிகளுக்கு அனுப்பி விற்கச் செய்தார்கள்.

பிளேடு ஒன்றின் விலை 15 ஷில்லிங்குக்கு விற்றிட அந்தப் புதிய நிறுவனம் ஏற்பாடு செய்தும்கூட, நாயுடு அவர்களின் பிளேடுகள் விற்பனைச் செல்வாக்கை அது உடைத்தெறிய முடியாமல் தோற்றுவிட்டது.