பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

தொழிலியல் விஞ்ஞானி ஜி.டி. நாயுடு


இலண்டன், அமெரிக்க மா நகர்களையே விற்பனைத் துறையில் ஒரு கலக்கு கலக்கி; இந்தியாவின் பெயரையும்,. தமிழ் இனத்தின் பெருமையையும் நிலை நாட்டினார்!

அதுபோலவே, அதே ரேசண்ட் பிளேடு வணிக உரிமையைக் கேட்டு, அமெரிக்க வாணிகர்கள் ஜி.டி.நாயுடுவின் காலடியில் குவித்த டாலர்களை எல்லாம் துச்சமாகத் தூக்கி எறிந்து, இந்தியன் விஞ்ஞானம் இந்திய மக்களுக்கே உரிமையே தவிர, பண ஆசை வல்லர்களுக்கு அன்று என்பதை அமெரிக்காவிலே நிலை நாட்டிய அதிசய மனிதராக இந்தியா வந்து தமிழ் மண்ணைத் தொட்டு வணங்கினார்.

ஜி.டி. நாயுடுவின்
மற்ற கண்டுபிடிப்புகள்!

இத்தகைய செயற்கரிய செயல்களைத் தனது சொந்த அறிவாலும், அனுபவத்தாலும் கண்டுபிடித்த விஞ்ஞானி ஜி.டி.நாயுடு, தேர்தலின்போது மக்கள் வாக்குப் பதிவு செய்யும் இயந்திரத்தையும் கண்டுபிடித்து, அதுவும் தாமஸ் ஆல்வாய் எடிசனால் கைவிடப்பட்ட அறிவியல் கருவியைக் கண்டுபிடித்து, அதைச் சென்னைப் பொருட்காட்சி சாலையில் இயக்கியும் காட்டினார் என்றால் - சாதாரண அறிவியல் பணிகளா இவை? இவை மட்டுமா அவர் கண்டுபிடித்தார்? வேறு சிலவும் உள. அவை எவை? காண்போம்.

மோட்டார் வண்டிகளுக்காக ஒரு கூட்டுறவு அமைப்பை யு.எம்.எஸ். என்ற பெயரில் துவக்கிய சிறிது காலத்திற்குள், தனது அறிவியல் அறிவால் ஓர் அதிசய முறையைக் கண்டார்! என்ன அது?

ஜி.டி. நாயுடு அவர்களின் அந்த முறையை மோட்டார் வண்டியின் ரேடியேட்டரில் பயன்படுத்துவதன் மூலம், மறுமுறை தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமே இல்லாமல், சில நூறு மைல்களுக்கு மோட்டாரை ஓட்டலாம் என்பதே அந்த முறை.

இதற்குப் பிறகு, புகைப் படக் கருவிகளுக்கான ஒரு புதிய பகுதியை ஜி.டி.நாயுடு கண்டுபிடித்து, அதற்கு ஒளி சமனக் கருவி, அதாவது Distance Adjuster என்று பெயரிட்டார்.