பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104வல்லிக்கண்ணன்

 அதற்காக மற்றவர்கள் தங்கள் இயல்புகளை விட்டு விடுவார்களா? அவரிடம் வந்து, பஸ்ஸில் போவதன் செளகரியம் பற்றி வர்ணித்தார்கள் சிலர். 'பஸ்களை நம்பப்படாது; நடுராத்திரியிலே திசை தெரியாத இடத்திலே உயர் வேடிச்சிட்டுதுன்னு சொன்னா, அங்கேயே காத்துக் கிடக்கப் போட்டிருவான், ரயிலுதான் ரொம்ப செளகரியம். காலை, கையை நீட்ட எழுந்து நிற்க, நடக்க... நினைச்சா, படுத்துக்கிடவும் செய்யலாமே', என்ற தன்மையில் விவரித்தார்கள் அநேகர்.

அவர்களிடம் எரிந்து விழாமலும் உள்ளக் கடு கடுப்பைக் காட்டிக் கொள்ளாமலும் இருப்பதற்கு அவருக்கு மிகுந்த பொறுமை தேவைப்பட்டது.

ஒரு மாதிரியாக ஒருநாள் சொக்கய்யா ஊரை விட்டுக் கிளம்பிப் போனார். என்று திரும்புவேன் என்று யாரிடமும் சொல்லவில்லை.

"ஆசாமி அவுட்! இன்னும் பத்துப் பதினைஞ்சு நாளைக்கு ஆளை பார்க்க முடியாது" என்று சிவபுரம் வாசிகள் பேசிக்கொண்டார்கள். 'அவருக்கென்ன! சுகவாசி. இரண்டு மூணு வாரம் கேம்ப் போட்டாலும் போட்டிருவாரு' என்றும் சிலர் சொன்னார்கள்.

அவர்கள் சொக்கய்யாவை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை தான். புறப்பட்டுப் போன மூன்றாம் நாளே சொக்கய்யா ஊரில் தமது வீட்டுத் திண்ணை மீது வட்டச் சம்மணம் போட்டு உட்கார்ந்து, வெற்றிலைச் செல்வத்தை பக்கத்தில் திறந்து வைத்து வெற்றிலையை ரசித்துப் போட்டுக் கொண்டிருந்தார். இந்த சகஜமான காட்சி இப்போது பார்த்தவர்களுக்கு ஆச்சரியமாகப்பட்டது.

  • என்ன அண்ணாச்சி, எங்கேயும் போகவே இல்லையா? என்று கேட்டார்கள்.