பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 வல்லிக்கண்ணன்

சிலிர்த்து நகை கவர்ச்சிகரமாகத் திகழ்ந்தது. அவளுடைய முகமே முழுதலர்ந்து இளம் வெயிலில் மினுமினுக்கும் அருமைான புஷ்பம் போல் மிளிர்ந்தது.

அம் முகத்தை வெகுவாக ரசித்த சந்திரன் கேட்டான் ‘எப்போது?’ என்று.

“காதலுக்கு உரியவளின் கூந்தலிலே கொலுவிருக்கிற போதுதான், வேறு எப்போது?” என்று கேட்டு அருவிச் சிரிப்பை அள்ளி வீசினாள் தோழி.

தங்கத்தை வெட்கம் பற்றிக் கொண்டது. சந்திரனின் உள்ளத்தில் ஆனந்தம் பொங்கிப் பொங்கி வழிந்தது.

அவன் கைநிறைய புஷ்பங்களைக் கொய்து தங்கத்திடம் கொடுத்தான். அவற்றை வாங்கிக் கொண்ட தங்கம் கைகளில் ஏற்றியபடியே நின்றாள்.

“ஏன் தலையில் சூடிக்கொள்ளவில்லை?” என்று அவன் விசாரித்தான்.

“தானாக வைத்துக் கொள்வதைவிட, காதலனே புஷ்பங்களைக் காதலியின் கூந்தலில் சூட்டுகிற போது அதிக இன்பம் உண்டாகும். பூக்களும் தனிச் சிறப்பைப் பெறும்” என்று ராஜம்மா சொன்னாள்.

‘சந்திரனும் அப்படியா!’ என்று கேட்டுச் சிரித்தான்.

‘போடி வாயாடி!’ என்று சீறிய தங்கம் மலர்களைத் தோழியின் மீது விசிறி அடித்தாள்.

“ஐயோ பாவம்! பூக்கள் வீணாய்ப் போச்சு. அவற்றை என்மேலே விட்டெறிந்ததற்கு பதிலாக அவர்மீது வீசி இருந்தாலாவது ஜாலியாக இருந்திருக்கும்” என்று தோழி தெரிவித்தாள்.

“ஐயோ! என்று முணங்கிய தங்கத்தின் முகம் செக்கச் சிவந்து விட்டது.