பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேலைக்காரி



"நல்ல ஆளா ஒருத்தி இருந்தால் சொல்லுங்க அண்ணாச்சி. சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஒரு ஆளு வேனும்" என்றார் சிவராமன், எதிரே வந்த சூரியன் பிள்ளையிடம்.

"ஏன், பஞ்சவர்ணத்தம்மா என்ன ஆனாள்?" என்று கேட்டார் பிள்ளை.

"அவள் தன் சுயவர்ணத்தை காட்டிப் போட்டாள்!" என்று சொல்லி, சிவராமன் பொருள் பொதிந்த சிரிப்பை உதிர்த்தார்.

"என்ன விஷயமய்யா? இப்ப அவ உங்க வீட்டிலே இல்லை?" அறிந்து கொள்ள வேண்டும் என்ற அவா சூரியன் பிள்ளையைத் தூண்டியது.

ஆனால், பசி பசி என்று படுத்திய குழந்தைகளுக்காக இட்டிலி வாங்கி வர வேகமாகக் கிளம்பியிருந்த சிவராமனுக்கு நின்று பேச நேரமில்லை. "ராத்திரி வரை இருந்தாள். அப்புறம் ஆள் அவுட்! சொல்லாமலே கம்பி நீட்டி விட்டாள். அது ரொம்ப ரசமான விஷயம். அப்புறம் சொல்றேனே" என்று, பிள்ளையின் ஆவலைக் கிளறி விட்டு விட்டு அவசரமாய் நடந்தார்.