பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்131


-நம்ம சிவராமன் சார் வீட்டுக்கு வந்து போகிற வேலைக்காரி ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு டைப்தான்! ஒருத்தியாவது ரொம்ப நாள் நிலைத்திருந்ததில்லை. இந்த பஞ்சவர்ணத்தம்மாள் நீடிக்க வேலை பார்ப்பாள்னு தோணிச்சு, அவளும் போயிட்டாளா? உம்ம்...

சூரியன் பிள்ளைதான் பஞ்சவர்ணத்தம்மானை சிவராமன் வீட்டில் வேலைக்குச் சேர்த்து விட்டவர். "வாழ்க்கையில் ரொம்பவும் கஷ்டப்பட்டவள். வசதியான இடம் கிடைத்தால் பிழைப்புக்கு வழி பண்ணி விடுங்க” என்று, அவருக்கு வேண்டியவரும் அந்த அம்மாளுக்குச் சொந்தக்காரருமான ஒருவர், அடிக்கடி தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் சிவராமனும் வீட்டு வேலைக்கு ஒரு ஆள் கிடைத்தால் சொல்லுங்களேன்” என்று பிள்ளையிடம் கேட்டுக் கொண்டார்.

சிவராமன் சாரையும் அவர் குடும்பத்தையும் நன்கு அறிந்தவர் பிள்ளை. மரியாதைக்காக அவரை இவர் "சார் போட்டுப்' பேசுவதும் குறிப்பிடுவதும் உண்டே தவிர, சிவராமன் 'ஸார்’ (உபாத்தியாயர்) வேலை எதுவும் பார்க்கவில்லை. ஏதோ ஒரு ஆபீசில் நல்ல உத்தியோகத்தில் இருந்தார். குழந்தைகள் சின்னஞ் சிறுசுகள். வீட்டு அம்மாளுக்கு வேலைக்காரி இல்லாமல் தீராது. இயல்பாகவே 'வீக'.. அடிக்கடி ஏதேனும் வியாதி வந்து உறவு கொண்டாடிக் கொண்டே இருக்கும். அதனாலே, சமையல் வேலை, இதர வீட்டு வேலைகளை எல்லாம் செய்வதற்கு ஒருத்தி அத்தியாவசியத் தேவை என்ற நிலைமை எப்போதும் உண்டு.

இந்த வேலைக்காரி பிரச்னை சிவராமனுக்கு என்றும் ஓயாத தொல்லையாகவே இருந்து வந்தது. அப்பாடா, வேலைக்காரி ஒருத்தி கிடைத்து விட்டாள். இனிமேல் கவலை இல்லை!' என்று அவர் நினைப்பார்.