பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் 139

 நிற்பதில்லை. குழந்தைகள் தின்னும்போது, 'ஏய்-ஏய் அக்காளுக்கு இல்லையா? அக்காளுக்குக் கொடேன்’ என்று எத்திப் பிடுங்கி மொக்குவதிலும் கருத்தாக இருந்தாள்.

அந்த பெண்ணின் போக்குகளும் இயல்புகளும் வீட்டு அம்மாளுக்குக் கட்டோடு பிடிக்கவில்லை. ஆகவே ஒரு நாள் அவள் வந்தது போல் சொந்த ஊருக்கே போய்ச்சேர வேண்டியதாயிற்று.

அவர்களுக்கெல்லாம் பிறகுதான் பஞ்சவர்ணத்தம்மாளுக்கு அவ் வீட்டில் வேலை கிடைத்தது. அவளும் தனது சுயவர்ணத்தைக் காட்டி விட்டாள் என்றால், அப்படி என்னதான் செய்திருப்பாள்?

சூரியன் பிள்ளையின் ஆர்வம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. சிவராமன் சாருக்கு எப்போது வசதிப் படும்; எந்த நேரத்தில் எந்த இடத்தில் அவரை சந்தித்தால், சாவகாசமாகப் பேச முடியும் என்பதெல்லாம் அவருக்கு அத்துப்படி! அவ்விதமே அவரைக் கண்டு உரையாடப் பிள்ளை தவறவில்லை.

பூசி மெழுகாமல் சிவராமனும் விஷயத்தை உள்ள படி சொல்லித் தீர்த்தார்.

பஞ்சவர்ணத்தம்மாளுக்கு, அதிகமாய் போனால், முப்பத்தஞ்சு வயசு இருக்கலாம். வாழ்க்கையை அனுபவித்து வாழவேண்டும் என்ற ஆசை அவளுள் கனன்று கொண்டிருந்தது. ஆனால் வாழ்க்கை அவளை வஞ்சித்து விட்டது. கல்யாணமாகியும் அவள் சுகப்பட வில்லை. புருஷன்காரன் என்ன காரணத்தினாலோ அவளை விலக்கி வைத்துவிட்டான். சாப்பாட்டுக்கே திண்டாடுகிற குடும்ப நிலைமை. எப்படி எப்படியோ காலம் தள்ள வேண்டியிருந்தது. கஷ்ட ஜீவனம்தான்.