பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146வல்லிக்கண்ணன்


நமது பூரண ஆனந்த வாழ்க்கைதான் முக்கியமே தவிர, வாழ்க்கைத் துணை முக்கியம் இல்லை. துணைவி இல்லாமலே நம்முடைய வாழ்க்கை பெர்பெக்ட் ஆக இயங்கும்.

அவனுடைய சிந்தனை காட்டிய வழி இது. அதன் படியே நடந்தான் அவன். அதற்காக அவன் வருத்தப்பட நேர்ந்ததும் இல்லை.

அதிகாலையில் நாலரை மணிக்கு எழுந்தான். குளிர்ந்த நீரில் குளித்தான். ஒன்றரை அல்லது இரண்டு மைல் தூரம் உலா போவான். ஒரு அம்மாள் பதிவாகச் சில பேருக்கு சமைத்துப் போட்டு வாழ்க்கை நடத்திய தனிச் சாப்பாட்டு விடுதியில் நேரம் தவறாது சாப்பிட்டான். வேலைகளை ஒழுங்காகக் கவனித்தான். ஓய்வு நேரத்தில் பத்திரிக்கைகள், புத்தகங்கள் படித்தான். சில நாட்களில் நண்பர்களோடு சுற்றுலா போய் வந்தான். சினிமா பார்த்தான். சந்தோஷமாகத்தான் இருந்தான்.

காலம் ஓடியது. பரிபூரண ஆனந்தம் பெரியவராகி, வேலையிலிருந்து ஓய்வு பெற்று, நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்,

தனி உணவு விடுதி நடத்திய அம்மாள் இறந்து விட்ட பிறகு, ஆனந்தர் தனிப்பட்ட 'மெஸ்’களில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். நாளடைவில் மத்தியானம் ஒரு வேளை மட்டுமே சாப்பாடு என்று பழக்கப்படுத்திக் கொண்டார். அவருடைய உணவுப் பழக்கம் வசதியாக அமைந்து விட்டது.

காலையில் காப்பியும் பிஸ்கட்டுகளும். காப்பியை அவரே தயாரித்துக் கொண்டார். மதிய உணவு ஒரு ஒட்டலில் கும்பல் சாப்பிடுவதற்கு முன்னரே போய் சாப்பிட்டு வந்து விடுவார். மாலையில் காப்பி மட்டும்.