பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 151

சிவகுரு பெரிய பஸ் நிலையத்தில் நிற்கிறார். பஸ்கள் வருகின்றன, போகின்றன. ஏகப்பட்ட பஸ்கள். எங்கெங்கோ போகிற பஸ்கள்.

அவை போகிற வழியில் உள்ள ஊர்களின் பெயர்கள் பஸ்சின் ஒரு பக்கத்தில் காணப்படும். முடிவாக போய் சேர்கின்ற ஊரின் பெயர் தலைப்புப் பலகையில் பெரிதாய் பளிச்சிடும்.

அவர் அவற்றையெல்லாம் படித்துப் பார்ப்பார். அவ்விதம் படித்து ரசித்த சமயம் ஒன்றில்தான் சிவகுருவுக்கு அந்த நினைப்பு எழுந்தது. இந்த பஸ்களில் ஏதாவது ஒன்றில் ஏறவேண்டியது.

அது போய் சேருகிற முடிவான இடத்துக்கு டிக்கட் வாங்கவேண்டியது. பயணம் போக வேண்டியதுதான், அங்கே போய் இறங்கி, ஊரைசுற்றிப் பார்க்கவேண்டும். அடுத்த பஸ்சிலோ, அதற்கு அடுத்ததிலோ ஏறி திரும்ப வரவேண்டியது இப்படி ஒவ்வொரு நாள் வெவ்வேறு பஸ்சில் ஏறி, வெவ்வேறு இடங்களுக்கு போய் பார்த்தால் எப்படி இருக்கும்?

புதிய புதிய இடங்கள், விதவிதமான ஊர்கள், கட்டிடங்கள், ஆட்கள் பார்க்கிற அனுபவம் புதுமையாக இருக்குமே!

இந்த நினைப்பு அவருள் ஊசலிட்டது. அவர் பெரிய பஸ் நிலையத்தில் வந்து நிற்கிற போதெல்லாம். புறப்பட்டுச் செல்கிற எந்த பஸ்சைப் பார்த்தாலும், ‘இதில் ஏறிப் போகலாமா இதில் போய் பார்க்கலாமா?’ என்று அவர் மனம் குறு குறுக்கும்.

அடுத்த தடவை போய்விட வேண்டியதுதான்... அடுத்த வாரம் இங்கே வருகிறபோது, ஏதாவது ஒரு பஸ்சில் ஏறிவிட வேண்டியதுதான் என்று எண்ணுவார். ஆனாலும், இதுவரை அவர் துணிந்ததில்லை.