பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 155

ஒரு அற்புதம். இதை எல்லாம் வியந்தபடி நின்றும், நடந்தும் அவர் வெகுதூரம் சென்று விட்டார், கடைசி குடிசைகளையும் கடந்து.

அவர் உள்ளத்தில் அமைதியும், சந்தோஷமும் பரவியது. அவ்வேளையில் குடிசைவாசிகள் இரண்டு பேர் அவரை நோக்கி வந்தார்கள். முரட்டுத் தோற்றம் கொண்டவர்கள்.

“எங்கேருந்து வாறீர்? இங்கே யாரைப் பார்க்க வந்தீர்?” என்று கேட்டான் ஒருவன்.

“சும்மா ஊரையும், கடலையும் பார்க்கத்தான் வந்தேன். இங்கு யாரையும் எனக்குத் தெரியாது,” என்றார் சிவகுரு.

“கஞ்சா, அபின் மாதிரியான சரக்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறீரா?”

“அது மாதிரி சமரச்சாரங்களே எனக்குத் தெரியாது”

“ஓ... துப்பு பார்க்க வந்தியா? சாராயம் காய்ச்சறாங்களான்னு பார்க்கிறியா?” என்று மற்றவன் முறைத்தான்.

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை!” என்று பரிதாபமாக சொன்னார் அவர்.

“பையிலே என்ன வச்சிருக்கே?” என்றவாறு முதல் முரடன் அவர் பையை பிடுங்கினான். அதனுள் கை விட்டு துழாவி ஒவ்வொன்றாக எடுத்தான்.

பர்ஸ் கையில் கிடைத்தது. அதை எடுத்து திறந்து பார்த்தான். பத்து ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுகளாக அறுபது ரூபாய் இருந்தது. சில்லறை காசுகளும் இருந்தன.

“உன்னை நம்பமுடியாது... திருட்டுத்தனமா உளவறியத்தான் வந்திருப்பே...”