பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 159


அவரும் அதுகுறித்து அதிக அக்கறை காட்டவில்லை. “கொஞ்ச நேரத்துக்கு முன்னே, இங்கிருந்து போன அம்மாள் உங்களுக்கு உறவோ?” என்று கேட்டார்.

“பிசினஸ் உறவுதான். இந்தப் பெரிய நகரத்தில் அந்த அம்மாளுக்கு என் உதவி தேவைப்பட்டது. தேவைப்பட்ட காலம்வரை நானும் திருப்திகரமாக சேவை செய்தேன். அதற்கு எனக்கு தாராளமான பணமும், போனஸ் என்று கருதப்பட வேண்டிய அளவுக்கு அன்பளிப்புகளும் கிடைத்தன. அத்துடன் இந்த உறவு சரி” என்று கவலை இல்லாமல் கூறினான் அவன்.

“இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்?!”

“அடுத்த வாடிக்கையைத் தேடவேண்டியதுதான். என் வாழ்க்கையையே ஒரு பிசினஸ் முறையில்தான் நான் நடத்தி வருகிறேன்.”

“நானும் வாழ்க்கையை ஒரு பெரிய பிசினஸாகத் தான் கருதுகிறேன்” என்று செல்வநாயகமும் சொல்ல ஆசைப்பட்டார். அவனுடைய கருத்தை காப்பி அடிப்பது போல் அது ஒலிக்கும் என்று அவர் மனசில் பட்டதனால், அந்த ஆசையை அப்படியே ஒடுக்கிவிட்டார்.

அந்த இளைஞனுடைய ‘காலத்துக்கு ஏற்ற’ நாகரிகரீதியான, சோஸியல் சர்வீஸ் அடிப்படையில் நடைபெறும் பிசினஸ் என்ன என்பதை அவரும் புரிந்து வைத்திருந்தார். நாகரிக சமுதாயமும், நகர வாழ்க்கையும், நவயுக கலாசாரங்களும் எத்தனை எத்தனையோ பிழைக்கும் வழிகளுக்கு வகைசெய்து வருகின்றன! எவர் எவரோ, என்ன என்ன எல்லாமோ செய்து, எப்டி எப்படியோ வாழ்க்கை நடத்துகிறார்கள்! இதை நன்கு அறிந்து வைத்திருந்த தொழில் அதிபர் அந்த