பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 163

நாடகம், எக்ஸிபிஷன், ரயில்வே பிரயாணம் மாதிரி, ஜாலி விளையாட்டு இப்படிப் பல நோக்குகள் உண்டு. நான் வாழ்க்கையை ஒரு பிசினஸாக வளர்த்து வரு கிறேன். இன்றைய சமுதாய நிலையில் பலருக்கும் பொதுவான பண வறுமை தவிர வேறு பலவிதமான வறுமைகள். அதன் அடிப்படையில் விதம் விதமான தேவைகள். அன்பு வறுமை, நட்பு வறுமை, உறவு வறுமை, உதவி வறுமை இப்படி அநேகம், இவை வாழ்க்கை வசதிகள் மிகுந்த உயர்மட்டத்தில் அதிகம் நிலவுகின்றன. அவற்றால் தவிக்கும் பெரிய இடத்துப் பெண்களின் குறைகளை நீக்குவதுதான் என் பிசினசின் முக்கிய நோக்கம். அதன் மூலம் பணமும் கிடைக்கும், சுகமும் கிடைக்கும். பண வரவையும் லாபத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுத் கப்படுவ தால் இது பிசினஸ் ஆகிறது...”

அவனுடைய விளக்கமும் பேச்சும் அவளுக்கும் வேடிக்கையாகப்பட்டன. அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். அந்நிலையில் வசந்தா மிகுதியும் ரசிக்கப்பட வேண்டிய கலையாய், கவிதையாய், இன்பக் கனியாய் தோன்றினாள் அவன் பார்வையில்.

ராஜன் அங்குவந்து ஐந்தாறு மாதங்கள் இருக்கும். “பரவால்லே வாழ்க்கை அருமையாய், இனிமையாய் குளுகுளுன்னு ஓடுது” என்று மகிழ்ந்து கொண்டிருந்த நாளின் ஒரு மனோகர வேளையில் வசந்தா சொன்னாள்

“நாம் பிரியவேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.”

“ஏன்? என்ன விஷயம்” என்று திகைப்புடன் கேட்டான் அவன்.

“நம் இன்ப உறவின் கனி என்னுள் உருவாகி வளர்கிறது” என அவள் மகிழ்ச்சியோடும் வெட்கத்துடனும் தெரிவித்தாள்.