பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திடீர் ஹீரோ!



சுயம்புலிங்கத்துக்கு அந்தத் துணிச்சல் எப்படி வந்தது? அவரை அறிந்தவர்களுக்கு அது ஒரே ஆச்சரியமாயிருந்தது. ஏதோ ஒரு வேகத்தில் அவர் அவ்விதம் செயல் புரிந்துவிட்டாரே தவிர பிறகு அதைப்பற்றி எண்ணும்போது அவருக்கே அது பெரும் ஆச்சரியமாகத்தான் பட்டது!

இத்தனைக்கும் சுயம்புலிங்கம் ஒரு சாதாரணப் பேர்வழி, பார்ப்பதற்கு அப்பாவி மாதிரி இருப்பவர். பலரை அண்ணாந்து பார்க்க வைக்கும் உயரம், ஏறெடுத்து நோக்கச் செய்யும் எடுப்பு. திரும்பிக் கவனிக்கத் தூண்டும் மிடுக்கு, பிறரிடம் மரியாதை அல்லது பயம் போன்ற உணர்ச்சியை உண்டாக்கும் ஒரு தோரணை, அல்லது பெரிய மனுஷத் தோற்றம். இப்படி ஏதேனும் ஒன்று அவரிடம் ஒட்டிக் கொண்டிருக்குமோ என்று ஆராயப் போனால் ஒரு மண்ணும் கிடையாது. பிறவி முதலே நோஞ்சானாக இருந்து, நோஞ்சானாகவே வளர்ந்தவர் அவர்.

தெருவில் சிறு கூட்டம் தென்பட்டாலும் ‘நமக்கு ஏன் வீண் வம்பு?’ என்று ஒதுங்கிப் போய்விடுவார். கலாட்டா, காலித்தனம், ரகளை, சண்டை சச்சரவு ‘வகையரா’ அவருக்குப் பிடிக்காத விஷயங்கள். ஆனால் அவற்றின் வளர்ப்புப் பண்ணை என்று கருதப்பட்ட வட்டாரத்தில்தான் அவர் வசித்தார். அவர் போகிற, வருகிற பாதைகளில் அங்கங்கே திடீர் திடீரென்று கலாட்டா, கூச்சல், கும்பல் முதலியன