பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176வல்லிக்கண்ணன்


விட்டு சும்மா ஊர் சுற்றிப் பொழுது போக்கி வந்த அவன், 'கண்டது கற்றுப் பண்டிதன் ஆகும்' நோக்கத்துடன், கைக்குக் கிடைத்த எல்லாப் பத்திரிகைகளையும் நாவல்களையும் படித்து மகிழ்ந்தான். அதன் கோளாறுகளாகவே இருக்கலாம். அவன் தேடிக் கொண்ட அனுபவம்.

அவன் பெற்றோருடன் வசித்த வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு அம்மணி வசித்தாள். அவளுக்கு இருபத்தைந்து வயதிருக்கலாம். என்றாலும் தான் ஒரு 'சின்னப் பொண்ணு' என்ற நினைப்பு அவளுக்கு. கிருஷ்ணம்மா எனும் அந்த அம்மணிக்கு கல்யாணம் ஆகியிருந்தது. பல வருட இல்லற வாழ்வு அவள்மீது குழந்தைச் சுமையை ஏற்றிவிடவில்லை. அதை ஒரு குறையாக அவள் கருதவுமில்லை.

கிருஷ்ணம்மா 'ரொம்ப ஸ்டைல் பேபி!' நாகரிக அலங்கார விதிகளை பின்பற்றி தன்னை சிங்காரித்துக் கொண்டு அங்குமிங்கும் அலைவாள். வாசல்படி ஓரம் நின்று வீதி வழியே போவோரை கண்டு களிப்பாள். மென்குரலில் பாட்டிசைத்து மகிழ்வாள். வீட்டினுள் குதித்துக் குதித்து நடப்பாள். கண்ணாடி முன் நின்று முகத்தைக் கோரணிகள் பண்ணி, கலகலவெனச் சிரிப்பாள். அவள் விழிகள் ஆயிரம் கஜல்கள் பாடும் எப்போதும்.

ரகுராமனுக்கு அவளை அடிக்கடி பார்க்க வாய்ப்பும் வசதியும் இருந்தன. அவன் தன்பக்கம் பார்க்கும் போதெல்லாம், கிருஷ்ணம்மா ஒய்யாரப் பார்வை எறிந்து சொகுசுச் சிரிப்பை சிந்துவது வழக்கம். ரகு, ரகு என்று செல்லமாக அழைத்து வம்புகள் பேசி ஆனந்தம் அடைவாள். எப்பொழுதாவது அபூர்வமாக அவள் தன் கைவிரல்களை அவன் கன்னத்தில் விளையாட விட்டு, மோவாயைப் பற்றி கொஞ்சுதலாக அசைத்து, காந்தப்