பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்179


அப்புறம் நடந்ததை அவன் எதிர்பார்க்கவில்லை. சிரித்து சிங்காரமாக நின்று. பின் முகம் சிவந்து தலை தாழ்த்திய மைதிலி கேவிக் கேவி அழுது கொண்டே ஓடினாள். அவள் அம்மா என்னவோ ஏதோ என்று பதறினாள்.

மகளிடமிருந்து விஷயத்தை மெது மெதுவாகக் கேட்டறிந்து கொண்ட அம்மா காளிதேவியாக மாறினாள். அவள் கொட்டிய ஏச்சுக்களுக்கும், சாபங்களுக் கும் அளவே கிடையாது.

எல்லாவற்றையும் மவுனமாக ஏற்று நின்ற ரகுராமன், 'சுத்த மூளை கெட்ட ஜேன்மங்கள்'! என்று தான் எண்ணினான். 'வீட்டை விட்டு வெளியே டோடா எச்சிக்கலை நாயே'! என்று அந்த அம்மையார் சொல்லும்வரை தான் அங்கேயே நின்றிருந்த மடத்தனத்துக்காக அனுதாபப்பட்டவாறே அவன் வெளியேறினான். இருந்த வேலையையும், ஊரையும் விட்டுவிட்டுப் போக வேண்டிய அவசியம் அவனுக்கு ஏற்பட்டது.

ரகுராமனின் மூன்றாவது காதல் முயற்சி அவனது இருபதாம் வயசில் தலைகாட்டியது. அப்போது அவன் இருந்த ஊரும் வேறு; பார்த்த வேலையும் சிறிது வசதியானதுதான்.

அவன் அலுவலகத்துக்கு வழக்கமாகப் போய்வரும் தெருவில் ஒரு வீட்டின் சன்னலில் சந்திரோதயம் கண்டான் ஒரு நாள். அம்முக மண்டலத்தில் அற்புத நட்சத்திரங்கள் போல் இரண்டு கண்கள் ஒளிவீசக் கண்டான். அம்புலியும் விண்மீன்களும் சிரிப்பை மலர்வித்துக் காட்டும் தாமரையாக மாறித் திகழ்வதை மறு நாள் பார்த்தான். கருவிழிகள் புரளும் கயல் மீன்களாக வேலை காட்டுவதைக் கண்டான் அடுத்த நாள்.

இப்படியாக வளர்ந்த அற்புதம் வாசல்படியில் மின்னல் கொடியென உருவெடுக்கக் கண்டான்.