பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மெத்தப் படித்தவர்



புத்தகங்கள்தான் சுந்தரமூர்த்தியின் உலகம். எப்போதும் அவர் புத்தகமும் கையுமாகத்தான் காணப்படுவார். எல்லா அறைகளிலும், மேஜை மீதும், படுக்கிற கட்டிலில்கூட, பல வகையான புத்தகங்கள் இருக்கும். நினைத்தபோது எடுத்துப் படிப்பதற்கு வசதியாக,

சாப்பிடுகிறபோது கூட சுந்தரமூர்த்தி இடது கையில் புத்தகத்தைப் பிடித்தபடிதான் சாப்பிடுவார். படிப்பது அவருக்குப் பொழுதுபோகு இல்லை. அது அவருடைய வேலை என்றுகூடச் சொல்ல முடியாது. அதுதான் அவரது வாழ்க்கை; அது அவரது உயிர்மூச்சு.

நண்பர்கள் வந்தால் அவர்களோடு அவர் உற்சாகமாகப் பேசி மகிழ்வார். பெரும்பாலும் பேச்சு புத்தகங்களைப் பற்றியும், பத்திரிகைகளைப் பற்றியுமே இருக்கும், நாட்டுநடப்பு, சமூகப் பிரச்சனைகள், அரசியல்கட்சி விவகாரங்கள் முதலியன பற்றியும் அவர் காரசாரமாகக் கருத்துக்கள் கூறுவார்.

உலகத்தில் உள்ள எந்த விஷயம் குறித்தும் சுந்தரமூர்த்தி ஓங்கி அடித்துப் பேசுவார். வானத்தின் கீழ் நிலவுகிற சகல விஷயங்கள் பற்றியும் அவர் தீவிரமான கருத்துக்கள் தெரிவிக்கத் தயங்க மாட்டார். பிரமுகர்கள், தலைவர்கள், முக்கியமானவர்கள் பேசுகிற பேச்சுக்கள், எழுதுகிற எழுத்துக்களை, எல்லாம் படித்துவிட்டு, அவற்றை அங்கீகரித்தோ