பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் ★ 28

“உங்களிடம் போன வருசம் நான் ஐநூறு ரூபாய் அவசரத்துக்கு வாங்கிப் போனேன், கடனாகவே இருக்கட்டும். உரிய வட்டி சேர்த்துத் தந்துவிடுவதாகச் சொன்னேன் அல்லவா? இன்றைக்கு உங்க பணத்தைத் திருப்பிக் கொடுக்கலாம்னு வந்திருக்கேன், கொஞ்சம் பணம் கிடைச்சுது, கடனைத் திருப்பித் தந்துவிடனுமில்லையா? வட்டி என்ன ஆச்சுன்னு கணக்குப் பார்ப்போம். நோட்டிலே எழுதி வச்சிருப்பீகளே? அதை எடுங்க!”

“இருமய்யா, வீட்டிலே அவன் மார்க்கெட்டுக்குப் போயிருக்கிறா. வரட்டும். கணக்கு வழக்கு எல்லாம் அவள் டிபார்ட்மெண்டுதான். குறிச்சு வச்ச நோட்டு அவகிட்டேதான் இருக்கும்” என்று சுந்தரமூர்த்தி சொன்னார்.

பிறகு, நாட்டில் அதிகரித்து வரும் வன்முறைச் செயல்கள் பற்றிக் காரசாரமாகப் பேசலானார்.

நமசிவாயமும் கருத்துத் தெரிவித்தார்.

அரசியல் கட்சிகளின் போக்குகள், சினிமா, பத்திரிகை மற்றும் மக்களின் தன்மைகள் பற்றி எல்லாம் இரண்டு பேரும் உற்சாகமாகப் பேசினார்கள்.

இடையில், மனைவி வீட்டுக்கு வந்து அடுப்படி வேலையில் ஈடுபட்டு விட்டதுகூட சுந்தரமூர்த்திக்குத் தெரியாது. மரபுக் கவிதை செத்துவிட்டது என்று அவர் ஓங்கி அடித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

மரபுக் கவிதை சாகவில்லை; அது சாகவும் சாகாது என்று நமசிவாயம் தீவிரமாக மறுத்துப் பேசினார்.

இப்படி யதார்த்த இலக்கியம் பற்றியும், புதுக்கவிதையின் தேக்க நிலை குறித்தும் இருவரும் சூடாக விவாதித்து முடித்தார்கள்.