பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 ★ வல்லிக்கண்ணன்

“நீ எரிஞ்சு விழப் படாது.”

“நான் ஏன்டி எரிஞ்சி விழப் போறேன்?”

“அப்போ, காதல் பண்ணிப்பாரு!”

“ஏய் வசந்தா, என்னடி நீ...”

“பார்த்தியா பார்த்தியா, இதோ கோபம் வந்து கொண்டே இருக்கே உனக்கு”

“நான் ஒண்னும் கோபிக்கலே, நீதான் கேலி பண்றே!”

“விளையாட்டு இல்லேடி காஞ்சனா, நான் மெய்யாலுமே சொல்றேன்–வாழ்க்கை ஒரே போர் ஆயிட்டுது இல்லே? அதிலே குளுகுளு இனிமையும், ஜிலுஜிலு மகிழ்ச்சியும் வந்து சேரனுமின்னா. காதல் செய்ய வேண்டியதுதான்.”

“இது சரியான யோசனைதானா, வசந்தா?”

“இதிலே என்ன தப்பு? ‘காதல் செய்வீர் உலகத் தீரே’ன்னு ஒரு பொயட் யோசனை-இல்லை, புத்திமதி கூறியிருக்கிறான். வெறும் பொயட் கூட இல்லை, மகாப் பெயட். ஐ மீன், மகாகவி!”

“அப்போ காதல் பண்ணலாம்கிறே?”

“ஆமாம், காதல் செய்து பார்ப்போம்!” என்று பாட்டாக இழுத்தாள் வசந்தா.

‘சரி, யாரை லவ் பண்ணலாம்?’

“இனி நாம் கவலைப்பட வேண்டிய பிரச்னை அது தான்!” என்றாள் காஞ்சனாவின் தோழி.

காஞ்சனாவுக்கு வயசு பதின்மூன்று நடந்து கொண்டிருந்தது. அவள் தோழி வசந்தாவுக்குப் பதின் மூன்று முடிந்து சில மாதங்கள் ஆகியிருந்தன.