பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 ★ வல்லிக்கண்ணன்

“ஒண்னுமில்லே” என்று இழுத்த காஞ்சனாவின் குரலில் கொஞ்சம் பொறாமை கலந்திருந்தது. அதை உணரும் திறம் தோழிக்கு இல்லை.

“சந்தர் அருமையா இல்லே?” என்று மிட்டாயை இனிமையாகச் சுவைப்பதுபோல் ரசித்துப் பேசினாள் வசந்தா.

“ஊம்”

“அல்லியை மலர வைக்கும் சந்திரன்; உன் முகம் மலர வைக்கும் சந்தர் நோக்கு, இல்லையாடி?”

“போதும், நிறுத்து உன் வசனத்தை!” என்று தடை விதித்தாள் காஞ்சனா. எனினும் வசந்தா சந்தரைப் பற்றி ஏதாவது சொல்லிக் கொண்டுதான் இருந்தாள். தினந்தோறும் சந்திக்கும் ஒவ்வொரு தடவையும் அவனைப் பற்றிச் சொல்வதும், சிநேகிதியைக் கேலி செய்வதும் அவளுக்குப் பிடித்த விளையாட்டு ஆகிவிட்டது. “இனி அடுத்த கட்டம் என்ன? பிளான் ஏதேனும் வச்சிரிக்கியா?” என்று சீண்டி விட்டு, “நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்; நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்!” என்று பாட்டிழுப்பாள்.

அப்போதெல்லாம் காஞ்சனா வெட்கமுற்றுக் குழம்பி, “சரிதான், போடி!” என்று முணகுவாள்.

ஒரு நாள் வசந்தா ஒரு பத்திரிகை கொண்டு வந்தாள்.

“ஏதுடி இது?” என்று காஞ்சனா ஆவலோடு கேட்கவும், அவள் பதில் சொல்வதில் ரொம்பவும் பிகு பண்ணிவிட்டு, “சந்தர் வீட்டில் வாங்கி வந்தேன்” என்றாள்.