பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்35


அவன் அருகே வசந்தாவும் நின்றாள், சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டு, அவனைத் தொடுவதுபோல் அவள் ஒட்டி நின்றும், அவன் பேச்சைக் கேட்டுச் சிரித்தபடி விலகியும்...

"டான்ஸ் ஆடுகிறானா, டான்ஸ்?" என்று கனன்றது காஞ்சனாவின் உள்ளம். "மானம் கெட்டவ, வெட்கம் இல்லாம இளிச்சுக்கிட்டு. என்னமா நிக்கறா பாரேன், அவனை இடிக்கிற மாதிரி... அவனும் தேன் குடிச்ச குரங்கு மாதிரி இந்தத் தேவாங்கு மூஞ்சியையே பார்த்துக்கிட்டு, பல்லைப் பல்லைக் காட்டிக்கிட்டு... ஐயே, சகிக்கலே!"

அவள் மனம் குமைந்து குமுறியது.

திரும்பி வீட்டுக்கே போய்விடலாமா என்று நினைத் தாள். 'எது எக்கேடு கெட்டால் நமக்கென்ன, நாம் பர்ட்டுக்கு நேரே போவோம்’ என்று துணிந்து நடந் தாள். அந்தப் பக்கம் பார்க்கப்படாது' என்று தீர்மானம் கொண்டு வந்த மனசினாலேயே அதைக் கடைப்பிடிக்க இயலவில்லை. 'இப்ப என்ன செய்றாங்க, பாரேன்!' என்று தூண்டியது.

"அதோ, உன் ஃபிரண்டு வந்துட்டா!" என்று அவன் வசந்தாவிடம் சொன்னது காஞ்சனாவின் காதிலும் விழுந்தது.

திரும்பிப் பார்த்த வசந்தா சிரித்தாள். "காஞ்சனா, இங்கே வாயேன்!" என்று கூப்பிட்டாள்.

காஞ்சனா ஒன்றும் பேசாமல் விடுவிடென நடந்தாள்.

"காஞ்ச், நில்லுடீ. நில்வேன், ஒரு சமாச்சாரம்" என்று கூறியபடி, ஒரு துள்ளுத் துள்ளி ஓடிவந்தாள் தோழி.