பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்37


"இப்ப என்னடி செய்யனுங்கிறே?"

சிங்காரச் சிட்டுக்களாய்த் திரிந்த இரு பெண்களும் "உர்-உர்" ரென்று ஒன்றை ஒன்று முறைத்து, மேலே பாய்ந்து ஒன்றையொன்று பிறாண்டத் தயாராகிவிட்ட பூனைகள் மாதிரி தோன்றினார்கள்.

சந்தருக்கு இது மிகவும் ஜோரான திருப்பமாகத் தென்பட்டது. ஏகப்பட்ட மகிழ்ச்சி அவனுக்கு.

"வெட்கம் கெட்ட சிறுக்கி!" என்று ஏசினாள் காஞ்சனா.

"ஓகோ, அவ்வளவுக்கு ஆயிட்டுதா?" என்று கூவி அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் வசந்தா.

"என் கை என்ன, புளியங்கா பறிக்கவா போயிருக்கு?" என்று சொல்லி, 'பளார், பளா'ரென இரண்டு அறைகள் கொடுத்தாள் காஞ்சனா. "வேஷம் உன்னுடன் தெருவில் நின்று பேசுவதே வெட்கக்கேடு!" என்று கூச்சலிட்டபடி வந்த வழியே திரும்பினாள் காஞ்சனா.

வசந்தா மூஞ்சியை உம்மென்று வைத்துக்கொண்டு, நாய், பேய் என்று மனசில் திட்டியவாறு, தன் வீட்டுக் குப் போனாள்.

"இந்தச் சிடுமூஞ்சியோடு இனி யாரு பேசப் போறா? ஷேமாம் ஷேம்! செங் குரங்கு!"

அவள் மனசுக்குத் திருப்தி ஏற்படவேயில்லை.

மறு நாள் காஞ்சனாவின் மனம் ஆனந்தத்தினால் கூத்தாடுவதற்கு வகை செய்த சேதி ஒன்று அவள் காதில் விழுந்தது. அவளுடைய அம்மாவும், இன்னொரு பெரியவளும் ஊர்க்கதை நாட்டுக் கதை எல்லாம், பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சோடு பேச்சாக இதுவும் ஒலித்தது.

தோ-3