பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான் 57


என்பது அவருக்குக் கஷ்டமான காரியமாகப்பட்டது. அதேசமயம்---

அங்கே திருநகரில் அநேகம் பேர் அவரை எதிர் பார்த்து ஆவலோடு காத்திருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் அளிப்பதா? வருவேன்---நிச்சயமாக வருவேன் என்று நேரிலும், கடிதம் மூலமும் உறுதி அளித்துவிட்டு இப்போது போகாமல் இருப்பது சரியான செயல் ஆகுமா? இப்படியும் அவர் மனசில் ஒரு குரல் குறுகுறுத்துக் கொண்டிருந்தது.

நாலு மணிக்குப் போய், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிலைமையை சொல்லி சீக்கிரமே புறப்பட்டு வர முயலலாமே? இதுவும் அதே மனக் குரல்தான்.

எண்ணுவது எளிது. அப்படி நடக்கும் என்று சொல்வதற்கில்லை; அங்கே போனால் நேரம் ஆகி விடத்தான் செய்யும்; ராத்திரியே ஊர் திரும்ப முடியாமலே ஆகிவிடலாம் என்ற நினைப்பும் எழுந்து நின்றது.

-நானும் இல்லாமல், அவனோட பாட்டியும் அம்மாவும் இல்லாமல், ராத்திரி நேரத்தில் பையன் என்ன செய்வான்? பகல் வேளையிலாவது தெருப் பையன்களோடு சேர்ந்து குதித்துக் கும்மாளமிட்டு தன்னை மறந்திருப்பான். தான் தனியாக விடப்பட்டிருப்பதை அப்பிஞ்சு மனம் உணராமல் இருக்கக்கூடும். ராத்திரியில் தனிமை அவனை அச்சுறுத்தும் அல்லவா? பசி வேளைக்கு உணவு கிடைக்காமல் போனால் அவன் மேலும் அதிகமாக வேதனைப்படுவானே!...

பிறர் உணர்வுகளைப் புரிந்து கொள்வதில் அக்கறை காட்டும் ஆசிரியர் சின்னப் பையனைப் பற்றி அதிகமாகவே கவலைப்பட்டார்.

எதிர்பார்த்துக் காத்திருக்கும் இலக்கிய ரசிகர்களைப் பற்றிய எண்ணமும், அவர்களுக்கு ஏற்படக்கூடிய