பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60வல்லிக்கண்ணன்

 பெரிய வீட்டுச் சின்ன ஐயா' என்றுமே குறிப்பிட்டு, அவரிடம் பணிவும் மரியாதையும் காட்டி வந்தார்கள்.

உயிர்கள் பிறவி எடுப்பதே 'தற்செயல் நிகழ்ச்சி“--'ஆக்ஸிடென்ட்' தானே? முதலாளி மகன் முதலாளியாகப் பிறந்துவிட்டால், அந்த உயிர் சகல சுகபோகங்களையும் அனுபவித்து வாழ்ந்து வளர முடிகிறது. ஏழை எளியவர்கள் வீடுகளில் பிறக்கின்ற குழந்தைகள் வயிற்றுக்குப் போதுமான உணவுகூடக் கிடைக்க வழி இல்லாமல் அவதியுறுகின்றன.

பெரிய வீட்டாரின் அருளுக்குப் பாத்திரமான உழைப்பாளிகள் வீட்டுப் பிள்ளைகள் கட்டுவதற்குக் கோவணத் துணிகூ.ட இல்லாமல், பரட்டைத் தலையும் புழுதி நிறைந்த உடலுமாய் திரிந்து கொண்டிருந்தார்கள் அவர்கள் அப்பன்மாரும் தாய்மார்களும் வியாழன் உறங்கி வெள்ளி எழும்போது முதல் உழைக்கத் தொடங்கி, இருட்டி வெகு நாழிகை ஆன பிறகு திரும்பி வந்தார்கள். அப்படியும் அவர்களுக்குக் கிடைத்தது 'தண்ணியும் பருக்கையும்' தான்.

அதே காலத்தில் வீட்டோடு இருந்து, வேளா வேளைக்கு உண்டு களைப்பால் உறங்கியும், உறங்கியதால் எழுந்த பசியை அடக்கத் தின்பண்டங்கள் தின்றும் நாள் கழித்து வந்த ராசாப்பிள்ளை வீட்டுக் 'குட்டி முதலாளி' தங்க நகைகளைச் சுமக்கும் "ஸ்டாண்டு’ ஆக மாற முடிந்தது.

பிறவிப் பெருமாளின் இடுப்பிலே தங்க அரை ஞாண். கிண்கிணி கோத்த இடுப்புச் சலங்கை. 'திருஷ்டி தோஷம்' முதலியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக நாய் பொறித்த தங்கக் காசு, சிறு சாவி வகையறா. காதுகளில் வெள்ளைக் கல் குச்சு; கால்களில் பாதசரம். அவற்றைக் கூடத் தங்கத்தால் செய்து போட்டு அழகு