பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70வல்லிக்கண்ணன்

 யில்லை, ஐயா, எவ்வளவு பாடுபட்டும் பலன் சரியாகக் கிடைக்கலே. ஏமாத்தனும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. குடும்பக் கஷ்டம் என்று இழுத்தான்.

அந்தக் கதை எல்லாம் எனக்கு வேண்டாம்! நானும் எவ்வளவோ காலமாகப் பொறுத்துப் பார்த்தாச்சு, இனியும் பொறுக்க முடியாது. இந்த வண்டி நெல்லை நம்ம வீட்டுக்கு அனுப்பிவிடு. இது கூடக் கடனை அடைக்கப் பத்தாது என்றே தோணுது என்று சொன்னாா பெரிய வீட்டுக்காரர்.

ஐயா ஐயா, நீங்க அப்படிச் சொல்லப்படாது. என் பிள்ளைகள் கதி என்னாவது? நாங்க எல்லோரும் சாப்பாட்டுக்கு என்ன செய்வோம்...?

அடிவயிற்றிலிருந்து பொங்கிய வேதனையோடு, ஏக்கத்தோடு, உணர்ச்சித் துடிப்போடு அவன் அலறினான். கையெடுத்துக் கும்பிட்டான். அவர் காலில் விழுந்து புலம்பினான்.

அருகில் நின்றவர்களில் சிலர் கண்களில் நீர் கசிந்தது. ஆனால், பிறவிப் பெருமாள் கல்சிலை மாதிரி தான் நின்றார். அவர் இதயத்தில் ஈரம் கசியவுமில்லை.

"ஊம். என்ன யோசனை? வண்டியை நம்ம களஞ்சியத்துக்கு ஒட்டு. நெல்லை களஞ்சியத்தில் கொட்டி விட்டு, வெத்துச் சாக்குகளோடு வண்டியை இவன் வீட்டுக்கு அனுப்பு'’ என்று வறண்ட குரலில் உத்தரவிட்டார் பெருமாள்.

இதற்குள் விஷயத்தைக் கேள்வியுற்று, சங்கரலிங்கத்தின் மனைவி பார்வதியும், பிள்ளைகளும் அழுது கொண்டு வந்து சேர்ந்தார்கள். பார்வதி வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கோண்டு புலம்பினாள், பிச்சை கேட்பது போல் கெஞ்சினாள்.