பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்77


டேன் என்கிறதே! என்ற எண்ணம் கம்பளிப் பூச்சியாய் அரிக்கையில், நாமும் ஒரு வாட்ச் வாங்கினோமில்லையே! இந்தச் சமயத்தில் ஒரு கடியாரம் இருந்தால் எவ்வளவு செளகரியமாக இருக்கும்! என்று நினைப்பு மீண்டும் மீண்டும் அவனுள் குமிழியிட்டது.

அது முன்னிலவுக் காலம். அகத்திப் பூ' போலவும், உருவமற்ற ஒரு முகத்தின் பெரும் சிரிப்பு போலவும், வானவெளியிலே தொங்கிக் கிடந்த அம்புலி மறைந்து விட்டது. நிலவொளியில் மலை முடிகளும் மரங்களும் மேடு பள்ளங்களும் ஒருவாறு பார்வைக்குப் புலனாகிக் கொண்டிருந்தன.


மேற்குத் தொடர்ச்சி மலை என்ற நீண்ட பெரிய மலைப்பகுதியின் தெற்கு கடைசிப் பகுதியில், ஒரு புறத்தில் அமைந்திருந்தது மலைநம்பி கோயில், பெருமலைத் தொடரின் வளமும் மிடுக்கும் கம்பீரியமும் குறைந்து குறுகி நின்ற பகுதி அது. ஆயினும் அது கூட பெரியதாய், வியப்பு எழுப்புவதாய், அச்சம் தரக் கூடியதாய், உயர்ந்த முடிகளையும் கிடுகிடு பள்ளங்களையும் பூதாகாரத் தோற்றங்களையும் இருண்ட காடுகளையும் பெற்றிருந்தது. மலையருவி சதா தடதடத்தும் காட்டாறு ஓயாமல் சலசலத்தும் இயற்கைமய ஓசை பாடிக் கொண்டிருந்தது.

நிலவு மறைந்த பிறரு எல்லாம் இருள் மொத்தையாய் கண்ணை உறுத்தின. வான் மண்டலம் எல்லையிலாப் பூக்காடு போல் நட்சத்திரங்களாய் ஒளி பெற்று விளங்கியது. மலை முடியின் சில சில புதர்கள், நட்சத்திரங்கள் போல் மினுக்கிய மின்மினிகளை அடுக்கடுக்காகச் சுமந்து, தனிச் சிறப்புடன் திகழ்ந்தன.

இரவு அமைதி நிறைந்தது இல்லை. இரவு நேரத்து மலைமுடியும் பூரணமாக அமைதி பெற்றிருக்கவில்லை. எத்தனையோ சத்தங்கள்! இனம் புரியாத பூச்சி