பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்91


ஏன் அப்படிச் செய்யக் கூடாது? அவரவருக்கு விருப்பமான பட்டங்களை அவரவரே சூடிக்கொள்கிற காலமாகத்தானே இருக்கிறது. இது! இப்படி அவர் வாதாடினார். புது உலகம், புரட்சி, சமூகசீர்திருத்தம், புதுமைப் பெண், புதியமனிதன், புது வாழ்வு என்றெல்லாம் புதுக்கவிதைகளை முழக்கிக் கொண்டிருந்த அவர் காதல் கவிதைகளையும் நிறையவே எழுதி வந்தார்.

அவருக்கும் சிநேகவல்லி கடிதம் எழுதியிருந்தாள். அவரும் அவளுக்கு ரசம் நிறைந்த கவிதைக் கடிதங்கள் எழுதி வந்தார். எழுதுவதுடன் நில்லாது, மற்றவர்களிடம் சொல்லியும் மகிழ்ந்தார்.

ஒரு கருத்தரங்கத்தில் மண்ணின் மைந்தன், கனவுப் பிரியனை சந்திக்க நேர்ந்தது. பேச்சோடு பேச்சாகக் காதல் விஷயமும் தலைகாட்டியது. கவிஞர் சிநேகவல்லிக்கு தான் எழுதும் காதல் கடிதக் கவிதைகளை மிகுந்த ஈடுபாட்டோடு எடுத்துச் சொன்னார்.

"யாரு, சிநேகவல்லியா?" என்று பதறினார் கனவுப் பிரியன்.

"ஏன், அவளை உங்களுக்குத் தெரியுமா?" என்று சகஜமாக விசாரித்தார் 'மண்'.

"எனக்கும் அவள் கடிதங்கள் எழுதுகிறாள் என்றார், கனவு".

"ஆகவே நீங்களும் அவளுக்கு எழுதுகிறீர்கள் காதல் கடிதங்கள்! அப்படித்தானே? ஹெஹ்!" என்று மூன்றாவது குரல் வெடித்தது அங்கே.

மர்மக்கதை மன்னன் இந்திரநாத் புன்முறுவல் பூத்தபடி அருகில் வந்து நின்றார்.

மற்ற இருவரும் அவரை ஒரு தினுசாகப் பார்த்தார்கள்.