பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92வல்லிக்கண்ணன்


மர்மம் சிரித்தது. "சிநேகவல்லி என்ற பெயர் கேட்டது. அருகில் வந்தேன். அதுக்கு முந்திய பேச்சை பும் கேட்டேன்..."

"சிநேகவல்லி என்ற பெயர் உம்மை காந்தமாகக் கவர்வானேன்? என்று கேட்டார் கவிஞர்.

"அத்தப் பெயருள்ள ஒருத்தி எனக்கும் கடிதங்கள் எழுதுகிறாள். நானும் பதில் எழுதுகிறேன். அதில் காதலும் கலந்திருக்கும்" என்றார் இந்திரநாத்.

"ஆங், அப்படியா?" என்று அதிசயப்பட்டார் நாவலாசிரியர்.

மூன்று பெரிய புள்ளிகள் சேர்ந்து நிற்கிறார்களே என்று நாலாவது நபராக வந்து நின்றார் எழுத்தாளர் ஏ.ஏ.ஏ.

ஏரியூர் ஏகநாத ஏகாம்பரம் என்பது அவர் பெயர். முதல் மூன்று எழுத்துக்களை மட்டுமே அவர் உபயோகித்து வந்தார். மற்றவர்கள் கிண்டலாக 'ஏ. ஏ. ஏ' என்று அழைக்கவும் அது உதவியது.

"ஐயா, நீர் பெரிய எழுத்தாளராச்சுதே. உமக்கு காதல் கடிதங்கள் வருமே? வந்திருக்குதா?" என்று மர்மம் துப்புத்துலக்க முற்பட்டார்.

'ஹே!' என்று விசித்திர ஒலி எழுப்பினார் ஏ.ஏ.ஏ. "எனக்கு யாரு அப்படி எல்லாம் எழுதப் போறா! சர்குலேசன் அதிகம் உள்ள பத்திரிகைகளில் அடிக்கடி எழுதுகிற உங்களைப் போன்ற ஸ்டார் எழுத்தாளர்களுக்கு நிறையக் கடிதங்கள் வரும். சிறு பத்திரிகைகளில் சுழன்று கொண்டிருக்கிற எனக்காவது காதலாவது கடிதமாவது பெண்ணாவது எழுதுறதாவது!" என்று இழுத்தார் அவர்.

"சரியான அறுவை" என்று மண்ணின் மைந்தன் முணுமுணுத்தார்.