பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்95


'இவள் கிழவி மாதிரி அல்லவா இருக்கிறாள்!' வயசு முப்பது முப்பத்திரண்டுதான் இருக்கும். அதுக்குள் முதுமை பெற்று, வாட்டத்தோடு காணப்படுகிறாளே" என்று கவிஞர் மனம் விமர்சித்தது.

அவள் அவருக்குத் தேநீர் உபசாரம் செய்தாள். கவிதை நூல் வெளியீட்டு விழா இனிது நடந்ததா என்று விசாரித்தாள். தான் வர இயலாது போனது பற்றி ஏதேதோ சொன்னாள். தனக்கு ஒரு புத்தகம் கொண்டு வந்திருக்கிறாரா என்று ஆவலுடன் கேட்டாள்.

மண்ணின் மைந்தன் சாரமற்ற பதில்கள் சொன்னார். சாதுர்யமாக, அவள் எழுதும் கடிதங்களுக்குப் பேச்சைத் திருப்பினார்.

"எனக்கு மட்டும்தான் நீங்கள் ஆசையோடு எழுதிக் கொண்டிருப்பதாக நினைத்தேன். நாவலாசிரியர் கனவுப் பிரியனும் அப்படித்தான் நம்பியிருந்தார். மர்மக் கதை மன்னனும், துணை ஆசிரியர் சாந்தப்பனும் உங்கள் அன்புக்கு பாத்திரமானவர்கள் என்பது பிறகு தான் தெரிந்தது. இதெல்லாம் என்ன? இன்னும் எத்தனை பேருக்கு கடிதங்கள் எழுதி மயக்கி காதல் கடிதங்கள் பெற்று வருகிறீர்கள்?"

கவிஞர் சாதாரணக் குரலில்தான் பேசினார். ஆயினும் அதில் குத்தல் மறைந்திருந்தது. வறட்டுத் தனம் கலந்திருந்தது. அவர் எழுதிய கடிதங்களில் நிறைந்திருந்த பிரியமும் நேசமும் அன்பும் தென்படவேயில்லை.

சிநேகவல்லியின் கறுத்து வதங்கிய முகம் மேலும் வாட்டமுற்றது. கலகலப்பாக பேசக்கூடிய இளம் பெண் ஒருத்தியை சந்திக்க நினைத்து வந்த கவிஞர், கண் கலங்கிக் குறுகுறுவென உட்கார்ந்திருக்கும் 'பேரிளம் பெண்'ணைப் பரிதாபத்துடன் பார்க்க வேண்டியிருந்தது.