பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்97

"காதல் கடிதங்கள் சேகரிப்பது எனக்கு மகிழ்ச்சி தரும் பொழுது போக்கு. வேறே என்ன சந்தோஷம் இருக்கு என் வாழ்க்கையில்?" என்றாள் அவள். பெருமூச்செறிந்தாள். பரிதாபகரமாகச் சிரித்தாள்.

இது ஒரு சைக்கலாஜிக்கல் கேஸ்- உளப்பரி சோதனைக்குரிய நபர் என்று கவிஞர் கருதினார்.

"அது சரி, இப்படி அஞ்சாறு பேருக்கு ஆசைமூட்டி கடிதங்கள் எழுதிரீைர்களே. அது வளர்ந்து முற்றி சந்திப்பு, கல்யாணம் அப்படி இப்படி என்று வந்துவிட்டால்? உங்கள் காதலர்கள் உங்களை முற்றுகையிட்டால்? அப்ப எப்படிச் சமாளிப்பீர்கள்?" என்று கேட்டார்.

சிநேகவல்லி விரக்தியாகச் சிரித்தாள். "காதலை யார் சார் அப்படி சீரியசா எடுத்துக் கொள்கிறார்கள்! ஏதோ நிகழ் காலத்திலே ஜாலியாகப் பொழுது போக்க வாய்ப்பு கிடைத்தால் சரிதான் என்றுதானே பலரும் நினைக்கிறார்கள்!" என்றாள்.

"இல்லே. நிலைமை முற்றிவிடுகிறது என்று வைத்துக் கொள்வோம்..."

"அதெல்லாம் ஒன்றும் முற்றாது சார். இப்ப நீங் களும்தான் எனக்கு ஆசையாகக் கடிதம் எழுதினிர்கள், என்னைக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் உங்கள் உள்ளத்தில் ஏற்பட்டது உண்டா? அப்படியே எண்ணம் இருந்தாலும் என்னை நேரில் பார்த்த பிறகும் அது நீடித்திருக்குமா? நெஞ்சிலே கை வைத்துச் சொல்லுங்கள்?’ என்று சவால் விடுவது போல் பேசினாள் அவள்.

கவிஞர் மண்ணின் மைந்தன் அசட்டுச் சிரிப்புடன் பேசாமல் இருந்தாரே தவிர, அவளுக்கு நேரடியாக பதில் சொல்ல இயலவில்லை.

★"தேவி" 24-4-1985