பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15 'ஆணைகள் சிலசமயம் நீதி யற்ற ஆத்திரத்தில்-அவசரத்தில் அமைந்த போதும் பேணுகின்ற ஒழுங்காலே கட்டுப் பாட்டால் பின்பற்றிச் செய்வதுதான் உண்மை யான வீனனல்லாத் தொண்டனவன் கடமையாகும்! விருப்புடனே அறிவாலே தலைவன் தன்னை மாண்புறவே தேர்ந்தெடுத்த பின்னர் அவனை மறுப்பதுவும் வெறுப்பதுவும் ஒழுங்கே அல்ல! சீறிவரும் வெள்ளத்தைத் தடுப்பதற்குத் திட்டமிட்டே கட்டுகின்ற அணைகள் போல மாறுபடும் கருத்தோட்டம் குழப்பங்கட்கு வலுவான ஒழுங்கொன்றே அணைக்கட் டாகும்! மீறுகின்ற செயல்எதுவும் நம்மை எல்லாம் மீளாத அழிவுக்கே கொண்டு செல்லும்! மாறுமாறாய் நாம் நடந்தோம் என்றால் உலகில் மரியாதைக் குறைவதற்கு இடமாய்ப் போகும்!