பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

101


யெல்லாம் ஜப்தி செய்யப் போறாங்கிற விஷயம் எங்களுக்குத் தெரிஞ்சிப் போச்சு.. பிள்ளை வழக்கம் போலக் கையைப் பிசைஞ்சிட்டு நின்றார். அப்போ சகஸ்ரநாமம், என்.எஸ்.கே கிட்டே வேலையாயிருந்தார். அவருடைய காருங்கெல்லாம் அப்போ சகஸ்ரநாமம் இன்சார்ஜிலேதான் இருந்தது. நான் போய் சகஸ்ரநாமம் கிட்டே விஷயத்தைச் சொன்னேன். அவர் உடனே என்.எஸ்.கே. காரிலே ஒண்ணை எடுத்துக்கிட்டுச் சிங்காநல்லூருக்கு வந்தார். ரெண்டு பேருமாச் சேர்ந்து எல்லாச் சாமானையும் ராத்திரிக்கு ராத்திரியா கொஞ்சங் கொஞ்சமாக் காரிலே கொண்டுபோய்ப் பொள்ளாச்சியிலே சேர்த்தோம்”,

“சகஸ்ரநாமத்தை உங்களுக்கு ஏற்கெனவே தெரியுமா?”

“தெரியுமாவது, நல்லாத் தெரியும். நானும் அவரும் சாயந்திரமானா வாலிபால் ஆடுவோம். பழகறதுக்கு ரொம்ப நல்ல மனுஷர். யாருக்கு எந்த ஆபத்து வந்தாலும் தன்னாலே முடிஞ்ச வரையிலே கை கொடுத்து உதவற சுபாவம் அவருடையது.”

“அப்படித்தான் நானும் அவரைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்..ம்,பிறகு.?”

‘பொள்ளாச்சியிலே எனக்கும் பிள்ளைக்கும் மறுபடியும் தகராறு வந்துடிச்சி, பிரிஞ்சிட்டோம்...”

“அதோடு அவரையும் மறந்து, என்.எஸ்.கே.யையும் மறந்துவிட்டீர்களா ?” -

“மறப்பேனா ? யாரை மறந்தாலும் மறப்பேன்; யாரை மன்னிச்சாலும் மன்னிப்பேன், என் புகழிலே ஒருத்தன் ‘ராபெரி பண்ண வரான்னா அவனை நான் மறக்கவும் மாட்டேன்; மன்னிக்கவும் மாட்டேன்..”

“அதற்காக... ?”

“என்ன நடந்தாலும் சரி, ‘என்.எஸ்.கே. யைச் சுட்டுத் தள்றதே சரி'ன்னு அன்னிக்கே உளுந்தூர்ப்பேட்டைக்குப் போய் ஒரு ஆசாமியைப் பிடிச்சித் துப்பாக்கி ஒண்ணு வாங்கினேன்!"