பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சித்தனைகள்

105


துப்பாக்கி வாங்கியிருப்பேனான்னு யோசிக்க ஆரம்பிச்சேன்... ‘என்னடா யோசிக்கிறே? உனக்குப் புத்தி இருக்கான்னு கேட்கிறேன்’ னார். அவர் மறுபடியும். நான் பேசாம இருந்தேன். பணம், பங்களா, காரு, வயசு கியசு, அது இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்; நடிப்புன்னு வரப்போ, அதை உனக்குச் சொல்லிக் கொடுக்கிற யோக்கியதை, தகுதி எனக்கு இருக்காடா ? கே.பி.காமாட்சியைப் படத்திலே போட்டா, இப்படி நடிக்காதே, அப்படி நடின்னு என்னாலே சொல்ல முடியும்; உன்கிட்டே அப்படிச் சொல்லமுடியுமா ? சொன்னா மரியாதைக் குறைவாயிருக்காதா? அந்த அவமரியாதையை ஒருவேளை பணத்துக்காக நீ வேணும்னா பொறுத்துக்கலாம்; என்னாலே பொறுத்துக்க முடியாது.டா, என்னாலே பொறுத்துக்கவே முடியாது.....அதனாலேதான் உன்னை நான் அந்தப் படத்திலே போடல்லே...இப்போவாச்சும் புரிஞ்சுதா ?ன்னார். அவர் சொன்னதெல்லாம் எனக்கு ஒரே ‘த்ரில்'லாயிருந்தது. ‘புரிஞ்சது'ங்கிறதுக்கு அடையாளமா தலையை மட்டும் ஆட்டி வைச்சேன்...'சரி, நான் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டேன்..இனி நான் சாக ரெடி ...அதுவும் ஒரு நண்பன் கையாலே நான் சந்தோஷமாவே சாவேன் ...ம், எடு துப்பாக்கியை சுடு என்னை! ன்னார். இனிமே சுடறதாயிருந்தா நீங்கதான் என்னைச் சுடனும்னு துப்பாக்கியை எடுத்து அவர்கிட்டே கொடுத்தேன்! ‘அட, புத்திசாலி’ ன்னு அவர் என்னை அப்படியே கட்டித் தழுவிக்கிட்டார்; நானும் அவரைத் தழுவிக்கிட்டேன். அன்னிக்குத்தான் முதல் தடவையா நானும் அழுதேன்; அவரும் அழுதார்.அந்தச் சமயம் பார்த்துப் பொன்னுசாமிப் பிள்ளை சொன்னது வேறே என் மனசை அப்படியே தொட்டு விட்டது...”

“அவர் என்ன சொன்னார் ?"