பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

விந்தன்


“வில்லன் ஜகதீஷ் வேஷம் அப்படியொன்றும் சாதாரண வேஷமில்லே; ரொம்பக் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டிய வேஷம். அந்தக் கஷ்டத்தை ஒரு நாளைப் போல உனக்கு மட்டுமே கொடுத்துக்கிட்டிருப்பானேன்னுதான் ரெண்டு ஆளுங்களை நான் மாத்திப் போட்டுப் பார்த்தேன். ஜனங்க விரும்பல்லே, விட்டுட்டேன்னார் அவர். அப்போத்தான் ஒருத்தரை ஒருத்தர் சரியாப் புரிஞ்சிக்காமலேயே இந்த உலகத்திலே பல தப்புங்க நடக்குதுங்கிற விஷயம் எனக்கு விளங்குச்சி!”

“அந்த மட்டும் எல்லாம் நல்லபடியாக முடிந்ததே, அதைச் சொல்லுங்கள்!”

“கொஞ்சம் யோசிச்சுப் பார்த்தா, இந்த உலகத்தில் நடக்கிறதிலே எது நல்லது, எது கெட்டதுங்கிறதைச் சொல்றது அவ்வளவு சுலபமில்லே...ஒருத்தனுக்கு நல்லதாப் படறது இன்னொருத்தனுக்குக் கெடுதலாப்படறது; ஒருத்தனுக்குக் கெடுதலாப் படறது இன்னெருத்தனுக்கு நல்லதாப் படறது..அதெல்லாம் பெரிய விஷயம்னு பெரியவங்க சொல்வாங்க... அதாலே, அதைப் பெரியவங்கக்கிட்டேயே விட்டுட்டு நம்ம விஷயத்துக்கு வருவோம்...அப்போ நாடக உலகத்திலே நான் ரொம்ப ‘டாப் ரேங்க்'கிலே இருந்ததாலே, ஐம்பதாயிரம் ரூபாயோடு வந்து என்னோடே ஒருத்தர் பார்ட்னராச் சேர்ந்தார்..எதுக்கு, நாடகக் கம்பெனி நடத்தத்தான்!”

“அதற்குள்ளே முப்பதாயிரம் ரூபாயில் படமே எடுக்கிற காலம் மாறிப் போய்விட்டதா ?”

“அது எப்பவோ மாறிப் போச்சு ...அதாலே ஐம்பதாயிரம் ரூபாயிலே நாங்க பொள்ளாச்சியில் ஒரு பெரிய நாடகக் கம்பெனியை உருவாக்கினோம். எங்கெங்கேயோ போய்க் கடைசியிலே ஈரோடுக்கு வந்து சேர்ந்தது..."