பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

விந்தன்


அந்த வித்தையை எடுத்ததும் செய்துட வேணாம்னு, ‘மரியாதையா எட்டிப் போய்யா! இல்லேன்னா குதிரை உதைக்கும். பல்லெல்லாம் ஒண்ணு விடாமப் போனாலும் போகும்’னு அவரை ஒரு தடவைக்கு ரெண்டு தடவையா எச்சரிச்சிப் பார்த்தேன்....”

“கேட்டாரா ?”

“எங்கே கேட்டார் ? அவர் பாட்டுக்கு அவர் கற்ற வித்தையைக் காட்டிக்கிட்டே வந்தார். என்னைக் கவிழ்க்க எதுக்கும் ஒரு எல்லை உண்டு இல்லே, என் பொறுமை அந்த எல்லையைத் தாண்டிடிச்சு. நான் கற்ற வித்தையை நான் காட்டினேன் - அவ்வளவுதான், குதிரை எட்டி ஒரே உதைதான் உதைத்தது. அந்த உதை படாத இடத்திலே பட்டு ஆளே அவுட் டாயிட்டார்!”

“அவுட்டாயிட்டார் என்றால்......?

“செத்தே போயிட்டாருங்க! “

“அட, பாவமே!”

“எனக்கும் பாவமாத்தான் இருந்தது. அந்த மாதிரி ஒருவிபத்து ஒரு தலைவருக்கு நேர்ந்திருந்தாக் கூட அதுக்காக நான் அவ்வளவு கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஏன்னா, அவங்க விஷயம் வேறே; அவங்களுக்கு எது நடந்தாலும் அதாலே அவங்க குடும்பம் நடுத்தெருவிலே நின்னுடாது. தொண்டனுங்க விஷயம் அப்படியில்லே, கொடி பிடிக்கிறதையும், ‘வாழ்க, ஒழிக'ன்னு கத்தறதையும் தவிர வேறே என்னத்தைக் கண்டாங்க அவங்க ?”

“ஏன் காணவில்லை ? போலீசார் தடியடி, கண்ணீர்ப் புகை, துப்பாக்கிச் சூடு, ஜெயில், தூக்கு..."