பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

விந்தன்


ஒப்படைச்சிருக்காங்க... அந்த வகையிலே நீ எனக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா ?”

“முடியுமான்னு இன்னொரு தடவை கேட்டுடாதீங்க, என் மனசு தாங்காது. என்னாலே செய்ய முடியும்னு நீங்க நினைக்கிற உதவியை உதவி'ன்னு சொல்றதுகூட எனக்குப் பிடிக்கல்லே, ‘கட்டளை'ன்னு சொல்லுங்க. அந்தக் கட்டளையை வாயாலோ கையாலோ கூட எனக்கு நீங்க இடவேணாம், காலாலே இட்டாலே போதும், தலையாலே செய்யக் காத்திருக்கேன்.’

‘பிரிட்டிஷார் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் எனக்கு இடுவது கட்டளை. நானோ உத்தியோக வர்க்கத்தைச் சேர்ந்தவன்; உன்னிடம் நான் எதிர்ப்பார்ப்பது உதவி. இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். உதவியென்றால் வேறு எந்த உதவியும் இல்லை; நாடக உதவிதான்... ஆமாம், உங்கள் கட்சி வெள்ளைக்காரன் கட்சிதானே ?

‘வெறும் வெள்ளைக்காரன் கட்சிகூட இல்லே, வெள்ளைக்காரனுக்கு வால் பிடிக்கிற கட்சின்னு காங்கிரஸ்காரங்க சொல்லிக்கிட்டிருக்காங்களே, நீங்க. கேட்கலையா ?

‘அவர்கள் எதையாவது சொல்லிவிட்டுப் போகட்டும்: தலைவர் ஈ.வே.ரா.வும் தளபதி அண்ணாதுரையும் நீ யுத்தப் பிரசார நாடகம் நடத்துவதற்காக உன்னை எதிர்த்து அவர்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்களே? ஏன் அப்படிக் கேட்கிறேன்னா, என்னாலே உன் பிழைப்பு கெட்டு விடக் கூடாதேன்னுதான்....!”

‘அதெல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டாங்க, இப்போ அவங்களே அந்தப் பிரசாரம்தான் செஞ்சிக்கிட்டிருக்காங்க!’

‘நீ ஒரு பிரசார நாடகத்துக்கு என்ன எதிர் பார்க்கிறே?

‘உங்க இஷ்டங்க, என்ன கொடுத்தாலும் வாங்கிக்கிறேனுங்க.'