பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

விந்தன்


விடுமோன்னு பயந்து, அப்பப்போ அது இடம் மாற்றி வைச்சிக்கிட்டிருக்கும் பாருங்க, அந்த மாதிரி நானும் நண்பர் ஜீவானந்தத்தை இடம் மாற்றி, இடம் மாற்றி வைச்சிக்கிட்டே இருந்தேன். எங்கே வைச்சிக்கிட்டிருந்தாலும் அவரைத் தேடி அவர் கட்சிக்காரங்க சில பேரு வந்துகிட்டே இருப்பாங்க..”

“ஆமாம். அண்டர்கிரவுண்டிலே இருக்கும்போதுகூட அவர்கள் கட்சி வேலை நிற்காதே!”

“அப்படி வரவங்க பேச்சுக்குப் பேச்சு ‘காம்ரேட், காம்ரேட்’னு சொல்றது எனக்கு என்னவோ போலிருக்கும். நான் ஒரு நாள் ஜீவானந்தத்தைக் கேட்டேன். ‘காம்ரேட்டுன்னா என்னய்யா, அர்த்தம் ?னு. அவர் ‘தோழர்'ன்னார். ‘அப்போ தோழர்ன்னு சொல்லிட்டுப் போறதுதானே'ன்னேன். ‘அந்த உரிமை உங்களுக்கு வேணும்னா இருக்கலாம். எங்களுக்கு இல்லேன்னார். அப்பத்தான் நான் ஒரு சாதாரண விஷயத்திலேகூட அந்தக் கட்சி எவ்வளவு கட்டுப்பாடோடு இருக்குதுங்கிற விஷயம் எனக்குப் புரிஞ்சது...”

“கட்டுப்பாட்டை மட்டும் அது காட்டவில்லை: என்னதான் இருந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சி இந்த நாட்டுக் கட்சியல்ல, அயல் நாட்டுக் கட்சி என்பதையும் அது காட்டவில்லையா ?”

“அதையும் காட்டத்தான் காட்டுது. இருந்தாலும் கட்சி அயல்நாட்டுக் கட்சியாயிருந்தாலும் ஜீவானந்தம் அயல் நாட்டு மனுஷன் இல்லே பாருங்க, அதாலே நான் அவரைத் தொடர்ந்து ஆதரிச்சி வந்தேன். அந்தச் சமயத்திலேதான் யாரோ ஒரு வாத்தியாரம்மாவுக்கு அவர் அடிக்கடி கடிதம் எழுதி என்கிட்டே கொடுத்தனுப்புவார். ‘ஏதோ கட்சி சம்பந்தப்பட்ட கடிதமாக்கும்’னு நினைச்சி, நான் அதைப் பத்திரமாகக் கொண்டு போய் அந்த அம்மாகிட்டே கொடுப்பேன். அவங்க அதை வாங்கிப் படிச்சிப் பார்த்துட்டுப் பதில் கடிதம் எழுதிக் கொடுப்பாங்க. அதையும் பத்திரமா எடுத்துக்கிட்டு வந்து ஜீவானந்தம்கிட்டே