பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

விந்தன்


“அதுதான் அவர் கலியாணம் செய்துகிட்ட புரட்சி ! அண்டர்கிரவுண்டிலே இருந்தப்போ யாரோ ஒரு வாத்தியாரம்மாவுக்கும் அவருக்கும் இடையே நான் கடிதம் கொண்டு போய்க் கொடுக்கிற ஆளா இருந்துகிட்டிருந்தேனே, அது கட்சி சம்பந்தப்பட்ட கடிதங்க இல்லையாம்; காதல் சம்பந்தப்பட்ட கடிதங்களாம்...”

“ஓ, அவர் காதலி பத்மாவதியம்மாளுக்கு நீங்கள்தான் ‘காதல் விடு தூதாயிருந்தீர்களா ?”

“ஆமாங்க.”

“தேவலையே நாடக நடிகரான உங்களை வைத்தே அவர்கள் தங்கள் காதல் நாடகத்தை நடத்தியிருக்கிறார்களே?”

“அதை வைத்துத்தான் அந்த மனுஷர் ‘நாட்டிலே நடந்தாத்தான் புரட்சியா, வாழ்க்கையிலே நடந்தாப் புரட்சியில்லையா ?'ன்னு அன்னிக்கு என்னைக் கேட்டிருக்கார். அப்போ அது எனக்குப் புரியல்லே, இப்போ புரிஞ்சிப் போச்சு!”

“அதோடு அவரை நீங்கள் விட்டு விட்டீர்களா ?”

“எங்கே விட்டேன் ? அவரும் என்னை விடல்லே, நானும் அவரை விடல்லே. என்னிக்கு அவர் திருவொற்றியூரிலே சிலையா நின்னாரோ அன்னிக்குத்தான் அவருக்கும் எனக்கும் இடையே இருந்த தொடர்பு எங்களை விட்டது.!"